தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இன்று தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
தணிக்கை, சட்டப் போராட்டம், பைரசி… பல தடைகளைத் தாண்டிய வெளியீடு
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே வெளியிட திட்டமிடப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’, தணிக்கைச் சான்றிதழ் தாமதம் மற்றும் தணிக்கை வாரியத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட சட்டப் பிரச்சினைகளால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீடித்தது.
இதற்கிடையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சியை அமைத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் திரைப்படத்தின்முழு பதிப்பும் இணையத்தில் பைரசியாக கசிந்தது படக்குழுவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இணையத்தில் வெளியாகியுள்ள சட்டவிரோத நகலை பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டாம் என்றும், திரையரங்குகளில் பார்த்து படக்குழுவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தது.
இறுதியாக, அனைத்து சிக்கல்களையும் கடந்து படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திருவிழா… சாத்தூரில் மட்டும் அமைதி
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன், பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் அமைத்து ‘ஜனநாயகன்’ வெளியீட்டை திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மட்டும் இந்தக் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி திரைப்படம் வெளியானது கவனம் ஈர்த்துள்ளது. அங்குள்ள தனலட்சுமி திரையரங்கில் வழக்கமாக காணப்படும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் இல்லாமல், திரையரங்கு வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
உட்கட்சி மோதலால் எழுந்த சர்ச்சை
இந்த நிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சி மோதலே காரணம் என கூறப்படுகிறது. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய மாவட்ட இணைச் செயலாளர் அஜித் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு கூடுது!
ஒரு தரப்பு வைத்த பேனரை மற்றொரு தரப்பு அகற்றுவதாகவும், அதற்கு பதிலடியாக மீண்டும் பேனர் அகற்றப்படும் என்ற சூழல் உருவானதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் எனக் கருதிய காவல்துறையினர் எந்த தரப்புக்கும் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
தவெக தொண்டர்கள் மத்தியில் பேசுபொருள்
இதன் விளைவாக, சாத்தூரில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் வெளியானது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிய நிலையில், ஒரே ஒருநகரில் உட்கட்சி மோதல் திரைப்பட வெளியீட்டிலும் எதிரொலித்த சம்பவம் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிகழ்வு, திரைப்பட வெளியீட்டைக் கடந்தும் கட்சிக்குள் நிலவும் ஒற்றுமை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
Source link
