சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி, ஏற்கனவே 2020-இல் மூதாட்டி ஒருவரை வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவிற்குதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் “இரும்புக்கர” ஆட்சி இருந்திருக்கிறது என்பது எத்தகைய வெட்கக்கேடு?
அதிலும், ஒவ்வொரு முறையும் கொடூரக் குற்றத்தைச் செய்துவிட்டு அதை மறைக்க சிறுசிறு குற்றங்களில் கைதாகி, சிறையைப் பாதுகாப்புக் கவசம் போல பயன்படுத்தியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் காவல்துறை தரந்தாழ்ந்து போனதையும், குற்றவாளிகள் தைரியமாக செயல்படுவதையும் பட்டவர்த்தனமாக்குகிறது.
விளாத்திகுளம் சிறுமி கொலைக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம் வலுபெற்ற பின்னரும், 10 நாட்களாகக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய திமுகவின் ஏவல்துறை, கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனைக் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டிருக்கிறது? எத்தனை தமிழக மகள்களைப் பலி கொடுத்திருக்கிறது? நினைத்தாலே பதைபதைக்கிறது.
மொத்தத்தில், சட்டம் ஒழுங்கில் அலட்சியம் காட்டும் திமுக ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழகப் பெண்கள் வாழவே முடியும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
