ரூ.2,500 மதிப்புமிகு மகளிர் திட்டம்: பெயரை மாற்றும் முதல்வர் விஜய்- வங்கிக்கணக்கில் வரவு எப்போது? – tamil nadu cm vijay plans to rename and implements rs 2500 mathippumigu magalir thittam

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நடப்பு பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்கின்றனர். அதேசமயம் விரைவில் பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய விஷயங்களை அமல்படுத்துவதற்கு மும்முரம் காட்டி வருகிறது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை 2,500 ரூபாய் வழங்கும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே மாநில அரசு மீதான சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் சுமை காரணமாக தங்கள் வாக்குறுதியை செயல்படுத்த முதலமைச்சர் விஜய் அவகாசம் கேட்டிருக்கிறார். கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்பு விழாவின் போதே, இதை சுட்டிக் காட்டினார்.

மதிப்புமிகு மகளிர் திட்டம் – தவெக அரசு பெயர் மாற்ற நடவடிக்கை

இந்த சூழலில் திட்டங்களுக்கான பெயர் மாற்றும் நடவடிக்கைகள் தவெக ஆட்சியில் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

நான் முதல்வன் திட்டம் – திறன் மேம்பாடு மகளிர் விடியல் பயணம் – மகளிர் பயணம் முதல்வர் படிப்பகம் – படிப்பகம் முதல்வரின் காலை உணவு திட்டம் – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்

இந்த வரிசையில் மகளிர் உரிமைத் திட்டப் பெயரையும் மாற்றவுள்ளனர். இதுபற்றி 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட தவெக வாக்குறுதியில் தெளிவாக இடம்பெற்றிருந்தது. அதன்படி, அடுத்த சில நாட்களில் ”மதிப்புமிகு மகளிர் திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை

இதன் தொடர்ச்சியாக வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன் அன்று 2026-27ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மதிப்புமிகு மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நிதி நிலைமை சீராக இல்லை என்று நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாயாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்பு

மாநிலத்திற்கு கிடைக்கும் வரி வருவாயும் சரிந்துவிட்டது. நேரடி கடன் 10 லட்சம் கோடி, மறைமுக கடன் 3 லட்சம் கோடி என மொத்தமாக 13 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்தின் கடன் உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். இதை வைத்து பார்க்கும் போது நடப்பு பட்ஜெட்டில் மதிப்புமிகு மகளிர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிக்க வாய்ப்புகள் இல்லை என்று பொருளாதார நிபுணர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர்.

ரூ.2,500 திட்டம் செயல்பட ஓராண்டு ஆகும்

கடந்த திமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தினர். அதேபோல் தவெக ஆட்சியிலும் குறைந்தது ஓராண்டாகிற்கும் மேல் ஆகும் என்கின்றனர். 1.31 கோடி பெண்கள் பயன்பெறும் 1,000 ரூபாய் உரிமைத் திட்டத்திற்கு ஓராண்டிற்கு 13,807 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மாதந்தோறும் 2,500 ரூபாய் என உயர்த்தினால் 39,300 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி வரும். இது மாநில அரசின் நிதிச் சுமையை 3 மடங்கு அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.1,000 உரிமைத் தொகை – முதல்வர் விஜய் போட்ட உத்தரவு

இதற்கிடையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 1,000 ரூபாய் உரிமைத் தொகை குடும்ப தலைவிகளுக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் என்று மாநில அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து, மே, ஜூன், ஜூலை மாதங்களில் எப்படி 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதோ, அதேபோல் நடப்பு பட்ஜெட் முடிந்து வரும் ஆகஸ்ட் மாதத்திலும் 15ஆம் தேதி அன்று உரிமைத் தொகை கிடைக்கும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link