ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், முதல் போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்த முதல் போட்டியில், அசோக் சர்மா, அறிமுக வீரராக விளையாடுவார் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேசினார். இவர், ஐபிஎல் 2026 சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர் துரூவ் ஜோரலுக்கு எதிராக, 154.2 வேகத்தில் பந்துவீசி அசத்தினார். இவருக்கு தற்போது இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 – 2026ஆம் ஆண்டு உள்ளூர் தொடர்களில், 10 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அசோக் சர்மா, அதில் 22 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஐபிஎலில், குஜராத் டைடன்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களை எடுத்துள்ளார். தொடர்ச்சியாக, அதிவேகத்தில் பந்துவீசி, பேட்டர்களை அச்சுறுத்துவதுதான் அசோக் சர்மாவின் ஸ்டெய்லாக இருக்கிறது.
ரிங்கு சிங்கிற்கு இடம்: டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு இறகு, ரிங்கு சிங், இந்திய அணி பிளேயிங் 11-ல் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர், அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில், இந்திய அணிக்கு சரியான பினிஷர் இல்லாத காரணத்தினால்தான், தொடர் தோல்விகளை சந்தித்தனர். இதனால்தான், தற்போது ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது.
மேலும், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இருக்கிறார்கள். ஷிவம் துபே, 5ஆவது பௌலிங் ஆப்ஷனாக சேர்க்கப்பட்டுள்ளார். ரவி பிஷ்னோய், முழுநேர ஸ்பின்னராக அணியில் இடம்பெற்றுள்ளார். ரவி பிஷ்னோய்க்கு இது அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இத்தொடரில் மட்டும், பிஷ்னோய் அபாரமாக செயல்பட்டுவிட்டால், அடுத்தடுத்து வாய்ப்பினை பெற முடியும் எனக் கருதப்படுகிறது.
இந்திய அணி பிளேயிங் 11 – வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ்.
அதிக அறிமுக வீரர்கள்: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, இந்திய அணி, இதுவரை 23 அறிமுக வீரர்களை விளையாட வைத்திருக்கிறது. இதுவும், ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
அபிஷேக் சர்மா, 2026ஆம் ஆண்டில், இதுவரை 9 முறை டக்அவுட் ஆகியிருக்கிறார். ரஷித் கான், 2019ஆம் ஆண்டில் 9 முறை டக்அவுட் ஆகியிருக்கிறார். 2024ஆம் ஆண்டில், சதாப் கானும் 9 முறை டக்அவுட் ஆகியிருக்கிறார். இந்த இருவரது சாதனையையும், அபிஷேக் சர்மா, சமன் செய்துள்ள நிலையில், ஜிம்பாப்வே தொடரிலும் அபிஷேக் சர்மா, ஒரு டக்அவுட் ஆனால், அது மோசமான உலக சாதனையாக மாறிவிடும்.
ஷ்ரேயஸ் ஐயர், இந்திய டி20 அணிக்கு 7 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, இன்னமும் ஒரு வெற்றியைக் கூட பெற்றுத் தரவில்லை. தற்போதும், முதல் போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்தித்தால், அது ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன்ஸி மீது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தும். இதனால், முதல் போட்டி, இந்திய டி20 அணிக்கு மிகமுக்கியமானதாக மாறியுள்ளது.
