முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிக்கிருத்திகை. பொதுவாக குழந்தை பாக்கியம், வேலை, திருமணம் ஆகியவற்றிற்காக முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்பவர்கள் கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. அதுவும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானை வேண்டி, விரதம் இருப்பது மிக விரைவாக பலனை தரும். இந்த நாளில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். முருகனுக்கு இந்த நாளில் பால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது ஆகும்.
கார்த்திகை விரதம் :
நட்சத்திரங்களில் கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானை வழிபடுவதற்கு மிகவும் ஏற்றதாகும். முருகப் பெருமானை வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களை கெளரவிக்கும் விதமாக உண்டாக்கப்பட்டதே கார்த்திகை விரதம். அதனால் தான் முருகப் பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமமும் ஏற்பட்டது. முருகப் பெருமானுக்கு, கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால், முருகப் பெருமானின் அருளாளும், கார்த்திகை பெண்களின் அருளாளும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் விசேஷமானதாகும்.
ஆடிக்கிருத்திகை :
கார்த்திகை விரதங்களில் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகையும், தை மாதத்தில் வரும் தை கிருத்திகையும் மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மட்டுமின்றி முருக வழிபாட்டிற்கும் மிகவும் ஏற்றதாகும். இந்த மாதத்தில் வரும் கார்த்திகை, ஆடி கார்த்திகை அல்லது ஆடிக் கிருத்திகை என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் ஆடிக் கிருத்திகையில் கார்த்திகை விரதம் இருக்க துவங்கி, தை கிருத்திகையில் நிறைவு செய்ய வேண்டும். இப்படி விரதம் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடிக்கிருத்திகை 2026 எப்போது?
ஆடிக் கிருத்திகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 06ம் தேதி வருவதாக காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிலர் ஆகஸ்ட் 07ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை என கூறி வருகிறார்கள். இதனால் எந்த நாளில் ஆடிக்கிருத்திகை விரதத்தை மேற்கொள்வது என்ற குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆடிக் கிருத்திகை 2026 ஆகஸ்ட் 07 வெள்ளி கார்த்திகை நட்சத்திரம் துவக்கம் ஆகஸ்ட் 06 மாலை 06.19 கார்த்திகை நட்சத்திரம் நிறைவு ஆகஸ்ட் 07 மாலை 04.51 ஆகஸ்ட் 06ம் தேதியன்று மாலைக்கு பிறகே கார்த்திகை நட்சத்திரம் துவங்குகிறது. ஆனால் ஆகஸ்ட் 07ம் தேதி அன்று தான் நாள் முழுவதும் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அதனால் ஆகஸ்ட் 07ம் தேதியை தான் ஆடி கிருத்திகையாக எடுத்துக் கொண்டு பக்தர்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும்.
ஆடிக்கிருத்திகை அன்று என்ன செய்யலாம்?
– அம்பாளுக்குரிய ஆடி மாதத்தில், முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திர விரதம் வருவதால் இது இரட்டிப்பு பலன் தரும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் முருகப் பெருமானுக்கு பால் குடம் ஏந்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுவது உண்டு.
– இந்த ஆண்டு ஆடி வெள்ளியில் ஆடிக் கிருத்திகை விரதம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்த நாளில் அம்மன் மற்றும் முருகனின் அருளை பெற விரதம் இருந்தால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். ஆடிக்கிருத்திகை அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, சுத்தமான ஆடைகள் அணிந்து கொண்டு விரதத்தை துவக்க வேண்டும். முடிந்தவர்கள் முருகனுக்கு பால்குடம் எடுக்கலாம்.பழனி, திருத்தணி போன்ற மலைக்கோவில்களுக்கு ஏறிச் சென்று முருகனை வழிபடலாம். அப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே முருகனின் விக்ரஹம் அல்லது வேலுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபடலாம். விளக்கேற்றி, முருகனின் திருநாமங்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். மாலை வரை விரதம் இருந்து, மாலையில் வீட்டில் செய்த பஞ்சாமிர்தத்தை முருகனுக்கு நைவேத்தியமாக படைத்து, அதை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், பால், பழம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். நாம் முழுவதும் முருகனின் மந்திரங்களை உச்சரித்தப்படி இருக்க வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், வேல்மாறல், திருப்புகழ் போன்றவற்றை படிக்கலாம்.
Source link
