ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தந்த நாளுக்குரிய வழிபாட்டினை முறையாக செய்வதால் அம்மனின் பரிபூரண அருளை பெறுவதுடன், வளமான வாழ்க்கையையும் பெறலாம். அப்படி ஆடி மாதத்தின் 2வது வாரத்தில் அம்மனை எப்படி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும், ஆடி 2வது வெள்ளிக்கு அப்படி என்ன சிறப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த சக்தி வாய்ந்த வழிபாட்டுடன் அம்பிகைக்குரிய அபிராமி அந்தாதியையும் ஆடி மாதத்தில் படிப்பது சிறப்பானது ஆகும்.
ஆடி வெள்ளி வழிபாடு :
ஆடி மாதத்தில் வரக் கூடிய மிகவும் சக்தி வாய்ந்த வழிபாட்டு நாளாக கருதப்படுவது ஆடி வெள்ளி. ஆடி மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை சரியான முறையில் வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தையும் அம்பிகை அருள்வாள் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மொத்தம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. இவற்றில் முதல் வெள்ளிக்கிழமை, ஆடி மாதப்பிறப்பு நாளான ஜூலை 17ம் தேதியன்றே அமைந்தது. ஆடி முதல் வெள்ளியன்று கோவிலிலோ அல்லது வீட்டிலோ திருவிளக்கு பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. ஆடி முதல் வெள்ளியில் இந்த வழிபாட்டினை செய்ய முடியாமல் தவற விட்டவர்கள், ஆடி மாதத்தில் வரும் தங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டினை செய்யலாம். இதனால் வீட்டில் இருக்கும் வறுமை, கடன் நீங்கி, செல்வ வளம் பெருகும்.
ஆடி 2வது வெள்ளி வழிபாடு :
இந்த ஆண்டு ஆடி 2வது வெள்ளி ஜூலை 24ம் தேதி அமைந்துள்ளது. இந்த நாளில் மிக எளிமையான வழிபாடு, அதே சமயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டினை வீட்டிலோ அல்லது கோவிலோ சென்று செய்யலாம். ஆடி இரண்டாவது வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டும். பொதுவாக அம்மன் கோவில்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதை பார்த்திருப்போம். இந்த மாவிளக்கு வழிபாடு என்பது ஏதாவது ஒரு வேண்டுதலை வைத்து செய்யப்படுவது ஆகும். நோய் தீர வேண்டும், கஷ்டம் தீர வேண்டும் அல்லது ஏதாவது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு, அந்த வேண்டுதல் நிறைவேறினால் மாவிளக்கு படைக்கிறோம் என பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். அந்த பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தான் இந்த மாவிளக்கு வழிபாட்டினை செய்வார்கள். மாவிளக்கு ஏற்றி அம்மனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது கிடைக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
அம்மனிடம் ஏதாவது வேண்டுதல் வைத்து, அதை நிறைவேற்ற மறந்து போய் இருந்தால் அல்லது யாராவது நமக்காக வேண்டுதல் வைத்து அதை நிறைவேற்ற தவறி இருந்தால் அதனால் ஏற்படும் தோஷங்கள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்காக அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவார்கள். நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றிக்கடனாக அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். அம்மனுக்கு ஏதாவது நேர்த்திக்கடன் இருக்குமோ, அதனால் அம்மனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற எண்ணம் இருப்பவர்களும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.
மாவிளக்கு செய்வது எப்படி?
– பச்சரிசியை சுத்தமாக கழுவி, தண்ணீரை நன்கு வடித்து விட்டு, நிழலில் லேசாக காய வைக்க வேண்டும். அரிசியில் லேசான ஈரப்பதன் இருக்கும் போது அதை மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவில் ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவின் அளவிற்கு ஏற்ப வெல்லத்தை எடுத்து லேசாக பாகு காய்ச்சி, வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய், சுக்கு பொடி கலந்த அரிசி மாவில் சிறிது சிறிதாக வெல்ல பாகினை ஊற்றி, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதிகம் இறுக்கம் இல்லாமல் சற்று தளர்வான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றும் முறை : – ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று காலையிலோ அல்லது மாலையிலோ கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ மாவிளக்கு ஏற்றலாம். பிசைந்து வைத்த மாவினை கொண்டு விளக்கு போல் செய்து கொள்ள வேண்டும். வாழை இலையின் மீது அந்த விளக்கை வைத்து, அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். மாவிளக்கிற்கு முன் பூக்கள் வைத்து, அந்த விளக்கில் அம்பாள் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபட வேண்டும். நம்முடைய வேண்டுதலை அம்மனிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். மாவிளக்கில் இருக்கும் திரி முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு அல்லது 20 நிமிடங்கள் எரிந்த பிறகு அந்த மாவினை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொவுத்து, நாமும் சாப்பிடலாம்.
Source link
