திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் (தனி) என 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை தவிர மற்ற 8 தொகுதிகளிலும் தி.மு.க.வே வெற்றி பெற்றது.
மணப்பாறையில் மட்டும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் தி.மு.க.வின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருந்து வருகிறது. அதற்கான செயல்திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற கே.என்.நேரு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளனர்.
திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திலும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வும் திருச்சி கிழக்கு தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த தேர்தலை விட 2 தொகுதிகள் குறைவு என்றாலும் 3 தொகுதிகளில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட் டும் தங்களது தனி சின்னத்திலும் நிற்பது என்ற நிபந்தனையுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அதனை ஏற்றுக்கொண்டு உள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியை ம.தி.மு.க. குறி வைத்து இருப்பதற்கு காரணம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக துரை வைகோ எம்.பி. இருப்பது தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான திருச்சியில் அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ தனி சின்னத்தில் (தீப் பெட்டி) போட்டியிட்டு சுமார் 3½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருச்சி மாநகர மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தீப்பெட்டி சின்னத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றால் அது தங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக அமையும் என ம.தி.மு.க. கருதுகிறது.
மேலும் திருச்சி கிழக்கு தொகுதி சாதி, மதம், மொழி இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டது என்பதால் வெற்றி பெறுவதும் எளிதாக கருதப்படுகிறது. கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து தற்போது ம.தி.மு.க.வும் திருச்சி மாவட்டத்தில்ஒரு தொகுதியை கேட்டு மல்லுக்கட்டுவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
