எந்த சின்னத்தில் போட்டி..? மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று முடிவு

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகள் வழங்குவதாகவும், அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறும் தி.மு.க. தலைமை வலியுறுத்தியது.

ஆனால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனோ, எங்களுக்கு 6 தொகுதிகள் வேண்டும், அதுவும் டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கூறி 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை ஏற்கனவே தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை குழுவினர், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினார்கள். ஆனால், 2 தொகுதிகள், தி.மு.க. சின்னத்திலேயே போட்டி என்பதை அறிந்தவுடன் அவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினார்கள்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம், தலைவர் கமல்ஹாசன் தலைமையில் 20-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்டமாக தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு இறுதியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.

Source link