சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆளும் தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் விருப்ப மனு வினியோகம் நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்திற்கும், வருகிற 22-ந்தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும், வருகிற 23-ந்தேதி ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும், வருகிற 24-ந்தேதி திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குமான விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு, திரும்ப பெறப்பட உள்ளது. விருப்பமனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
