aadi 2nd velli puja method ஆடி 2வது வெள்ளியில் எந்த அம்மனை, எப்படி வழிபட வேண்டும்?

ஆடி மாதம் அம்மனின் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த நாளுக்குரிய தேவியின் வடிவத்தை வழிபடுவதால், அம்மனின் அருள் முழுவதுமாக கிடைத்து, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அப்படி ஆடி மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமையில் அம்பிகையின் எந்த வடிவத்தை, எப்படி வழிபட வேண்டும், அப்படி வழிபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆடி 2வது வெள்ளி வழிபாட்டு பலன்கள் :

ஆடி 2வது வெள்ளி அங்காள அம்மன் மற்றும் காமாட்சி அம்மனை வழிபட ஏற்ற நாளாகும். அங்காள அம்மன் என்பது காளி தேவியின் மறு வடிவமாகும். அதே போல் காமாட்சி அம்மன் வடிவம் என்பது துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒன்றுபட்ட வடிவமாகும். ஆடி 2வது வெள்ளிக்கிழமையில் அம்மனின் இந்த இரண்டு வடிவங்களையும் வழிபடுவதால் அறியாமை நீங்கி, நல்ல புத்தியும், தெளிவான ஞானமும் கிடைக்கும்.

ஆடி இரண்டாம் வெள்ளியன்று அங்காள பரமேஸ்வரியை வழிபடுவதன் மூலம் நம்மைச் சுற்றியும்ம எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. அதே போல் அன்னை காமாட்சி தேவி, சிவபெருமானை அடைவதற்காக ஒற்றைக் காலில் அக்னி மத்தியில் கடும் தவம் புரிந்த உன்னத நிலையை இந்த நாள் குறிப்பிகடுவதாக சில மரபுகளில் போற்றப்படுகிறது. இந்த நாளில் காமாட்சியின் அருளை பெற வழிபாடு செய்வது சிறப்பு.

வழிபாட்டு முறை :
1. அம்மனின் படம் அல்லது சிலைக்கு சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்கள் மற்றும் வேப்பிலை சமர்ப்பித்து அலங்கரிக்கலாம். வேப்பிலை மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.
2. ஆடி மாதத்திற்குரிய பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் அல்லது கேழ்வரகு கூழ் செய்து அம்மனுக்குப் படைக்கலாம்.
3. அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து மாவிளக்கு செய்து, அதில் தீபமேற்றி வழிபடுவது இந்த நாளில் தனிச்சிறப்பாகும்.

இப்படி வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் திருமண தடைகள் நீங்கும். கணவரின் ஆயுள் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தீராத நோய்கள் மற்றும் உடல் உபாதைகள் நீங்கும்.

மங்கள கெளரி விரதம் :

ஆடி 2வது வெள்ளியில் அம்பிகையை மங்கள கெளரியாக பாவித்து வழிபட வேண்டும். அனைத்து பெண் தெய்வங்களையும் கெளரியின் வடிவமாக நினைத்து வழிபாடு செய்வது சிறப்பு. சிவபெருமானை அடைய வேண்டும் என்பதற்காக கடுமையாக தவம் இருந்து, ஈசனை எப்போதும் பிரியாமல் இருக்கும் வரத்தை பெற்றவள் அம்பிகை. அவளைப் போலவே விரதம் இருந்து, வெள்ளிக்கிழமையில் வழிபடுபவர்களுக்கு மனம் மகிழ்ந்து முழுமையாக அருளை அம்பிகை வழங்குவாள் என்பது நம்பிக்கை. ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு மங்கள கெளரி விரதம் என்று பெயர். இந்த விரதம் கடைபிடித்து, பக்தியுடன் வழிபாடு செய்பவர்களுக்கு அம்பிகை வேண்டிய வரங்களையும், சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Source link