மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், மத்திய அரசு ஒரு முக்கிய சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கையாற்றிய இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சார்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த மசோதாவை அவையில் சமர்ப்பித்தார்.
1971-ம் ஆண்டின் சட்டத்தில் கொண்டுவரப்படும் முக்கிய மாற்றம்
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971 (Prevention of Insults to National Honour Act, 1971)-ன் படி, இந்திய தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவற்றுக்கு மட்டுமே முழுமையான சட்டப் பாதுகாப்பு உள்ளது.தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 மூலம், இச்சட்டத்தின் பிரிவு 3-ல் திருத்தம் செய்யப்படுகிறது. இதன் விளைவாக, தேசிய கீதத்திற்கு இணையான சட்டப்பூர்வ தகுதியும், பாதுகாப்பும் வந்தே மாதரம் பாடலுக்கும் நீட்டிக்கப்படும்.
என்னென்ன செயல்கள் குற்றமாகக் கருதப்படும்?
வந்தே மாதரம் பாடல் பாடுவதை யாராவது வேண்டுமென்றே தடுத்தாலோ அல்லது அதற்கு இடையூறு விளைவித்தாலோ அது குற்றவியல் நடவடிக்கையாக மாறும்.இப்பாடல் இசைக்கப்படும் அல்லது பாடப்படும் பொதுக் கூட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
150-வது ஆண்டு கொண்டாட்டமும் வரலாற்றுப் பின்னணியும்
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, நாடு முழுவதும் ஓராண்டு காலம் நடைபெற்ற சிறப்பு கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.1950 ஜனவரி 24 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், “வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியதால் இது தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தையும் கௌரவத்தையும் பெறும்” என்று குறிப்பிட்ட வரலாற்று முடிவை இந்த சட்டம் தற்பொழுது முழுமைபடுத்துகிறது.
நாடாளுமன்றத்தில் வெடித்த அரசியல் மோதல்
மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அடுத்த கட்ட நகர்வு என்ன?
மாநிலங்களவையில் தற்போது இந்த மசோதா அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, இந்த மசோதா இரு அவைகளிலும் (மாநிலங்களவை மற்றும் மக்களவை) விரிவான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர், இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இது முழுமையான சட்டமாக நாடு முழுவதும் அமலுக்கு வரும்.
Source link
