சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தைச் சுற்றி சமீபத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மணிரத்னம் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்பதில் குழப்பம் நிலவியது. ஏ.ஆர்.ரகுமான் அல்லது சாய் அபயங்கர் இசையமைப்பார் என சினிமா வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவின.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக பரவும் செய்தி வெறும் வதந்தி மட்டுமே என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே இப்படத்திற்காக இரண்டு பாடல்களை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
