Bank Loan Closed: Important Documents,வாங்கிய கடனை அடைத்தால் வேலை முடிந்ததா? நீங்கள் கேட்டு வாங்க வேண்டிய 5 ஆவணங்கள் – important documents to collect after bank loan repayment noc clearance

வங்கியில் நீங்கள் வாங்கிய கடனை கட்டி முடித்ததும் உடனடியாக இந்த 5 ஆவணங்களையும் நீங்கள் வங்கியிடம் கேட்டு வாங்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்.

இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் மூலம் கடன் பெற்று வீடு, கார் வாங்குவதோ அல்லது படிப்பை முடிப்பதோ மிக எளிதான ஒன்றுதான். ஆனால், கடைசித் தவணையை செலுத்தி முடிக்கும்போது ஏற்படும் மனநிம்மதி தனித்துவமானது. தலைக்கு மேல் இருந்த ஒரு பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல ஒரு உணர்வு கடனாளிகளுக்கு கிடைக்கும். ஆனால், கடன் தவணைகள் முழுவதையும் செலுத்திவிட்டால் நம்முடைய வேலை முடிந்துவிட்டதா? இல்லை. கடன் முடிந்த பிறகும் வங்கியிடமிருந்து பெற வேண்டிய முக்கிய ஆவணங்களை வாங்க மறந்துவிட்டால், எதிர்காலத்தில் வீட்டை விற்கும்போதோ அல்லது புதிதாக கடன் வாங்கும்போதோ பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.

கடன் முடிந்ததும் வங்கியிடம் பெற வேண்டிய 5 முக்கியமான ஆவணங்கள்!

1. தடையில்லாச் சான்றிதழ் (No Dues Certificate / NOC)

இதுதான் மிக மிக முக்கியமான ஆவணம். வங்கிக்குச் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகையையும் நீங்கள் முழுமையாகச் செலுத்திவிட்டீர்கள் என்பதற்கும், இனி எந்தக் பாக்கியும் இல்லை என்பதற்குமான அதிகாரப்பூர்வ சட்டப்பூர்வ சான்று இதுவே ஆகும்.

2. அசல் சொத்து ஆவணங்கள் (Original Property Documents)

நீங்கள் வீட்டுக் கடன் அல்லது அடமானக் கடன் வாங்கியிருந்தால், பாதுகாப்பிற்காகச் சொத்தின் அசல் ஆவணங்களை (பத்திரப் பதிவு, தாய் பத்திரம், ஒப்பந்தங்கள் போன்றவை) வங்கியிடம் சமர்ப்பித்திருப்பீர்கள். கடன் அடைக்கப்பட்ட உடனேயே இந்த அசல் ஆவணங்களை வங்கியிடம் திரும்பக் கேட்டுப் பெற வேண்டும். மேலும், எந்தப் பக்கமாவது விடுபட்டுள்ளதா அல்லது கிழிந்துள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

3. கையொப்பமிட்ட காசோலைகள் (Signed Blank Cheques)

கடன் வாங்கும்போது பாதுகாப்பிற்காகக் கையொப்பமிட்ட காசோலைகளை வங்கியிடம் வழங்கியிருப்பீர்கள். கடன் முடிந்ததும் அந்த காசோலைகளை வங்கியிடமிருந்து திரும்பப் பெற்றுவிட வேண்டும். இது எதிர்காலத்தில் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

4. கடன் கணக்கு முடிப்பு அறிக்கை (Loan Closure Statement)

உங்கள் கடனுக் கணக்கு முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது என்பதைக் தெளிவாகக் குறிப்பிடும் “லோன் குளோஷர் ஸ்டேட்மென்ட்” ஆவணத்தை வங்கியிடம் பெறுவது அவசியம். எதிர்காலத்தில் நிதி தொடர்பான தகராறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இது ஒரு வலுவான சான்றாக இருக்கும்.

5. சிபில் அறிக்கை புதுப்பிப்பு (CIBIL Score Update)

கடனை அடைத்த 30 முதல் 45 நாட்களுக்குள் உங்கள் CIBIL அறிக்கையைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் கடன் அடைக்கப்பட்ட விவரத்தை வங்கி சிபில் அமைப்பிற்குத் தெரிவித்து, அதில் ‘Status: Closed’ என்று மாறியுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். இது புதுப்பிக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நீங்கள் புதிய கடன் பெறும்போது சிக்கல் ஏற்படலாம்.

ஏன் இந்த ஆவணங்கள் அவசியம்?

எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் சொத்தையோ அல்லது வாகனத்தையோ விற்க முற்படும்போது, வாங்குபவர் நிச்சயமாக NOC சான்றிதழைக் கேட்பார். மேலும், வேறு வங்கியில் புதிய கடன் வாங்கும் போது, பழைய கடன் இன்னும் முடிவடையாமல் நிலுவையில் இருப்பது போல் காட்டப்படலாம். எனவே, கடன் முடிந்த உடனேயே வங்கிக்குச் சென்று இந்த ஆவணங்களை முறைப்படி பெற்றுக்கொள்வது நல்லது.
Source link