இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடற்கரை பகுதி வழியாக கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் லோடு வாகனத்தை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் ரோந்து பணி

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிக்கோநகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, போலீசார் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், லோடு வாகனம் பறிமுதல்

அப்போது இனிக்கோநகர் கடற்கரைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக ஒரு லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 35 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகள் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசார் வருவதைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடி விட்டார்கள். எனவே அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் லோடு வாகனம், சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது.

Source link