‘நீட் போராட்டத்தால் ஜனநாயகன் ஊத்திக்கிச்சு’ முதல்வர் விஜய் சோகத்துல இருக்கார்- ஆர்.பி.உதயகுமார் குபீர் – neet protest has hurt jananayagan cm vijay is upset says rb udhayakumar

மாநிலம் முழுவதும் நீட் போராட்டம், வறட்சி அபாயம் மற்றும் காவிரி-மேகதாது விவகாரம் பேசுபொருளாக இருக்கும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மௌனம் காப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார். மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் திரைப்பட விவகாரத்தில் மட்டுமே அக்கறை காட்டுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழகம் முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று விமர்சித்தார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெற்றி, தோல்வி குறித்த கவலையிலேயே அவர் இருப்பதாகத் தெரிகிறது என்றும், மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.

வறட்சியை நோக்கி நகரும் தமிழகம்

தமிழகத்தில் அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், பல ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது என்றார். தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி என்ற நிலையில், தற்போது 71.2 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பதாகவும், இது மொத்த கொள்ளளவில் 31.7 சதவீதம் மட்டுமே என்றும் தெரிவித்தார்.

ஏரிகள் வறண்டு வரும் நிலை

தமிழகத்தில் உள்ள 14,141 ஏரிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்டதாகவும், மேலும் பல ஏரிகள் வறட்சி அபாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக செயல்படுத்தப்படாததால், அணைகள் மற்றும் ஏரிகளில் சேறும் சகதியும் அதிகரித்து, நீர் சேமிக்கும் திறன் குறைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

“திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்ல”- ttv dhinakaran

மேகதாது, காவிரி குறித்து மௌனம் ஏன்?

மேகதாது அணைத் திட்டம், காவிரி நீர் திறப்பு மற்றும் தமிழகத்தின் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலளிக்கத் தவறுகிறார் என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார். தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த விவகாரங்களில் அரசு தெளிவான விளக்கத்தையும் நடவடிக்கையையும் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.

அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காலநிலை மாற்றம் காரணமாக அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை எதிர்கொள்ள அரசு முன்கூட்டியே நீர் மேலாண்மை, பாசன வசதிகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாக விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் விடுத்த கேள்வி

நீட் போராட்டம், மேகதாது, காவிரி, வறட்சி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் எப்போது தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்றும், மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவாரா என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். மேலும், தமிழகத்தை எதிர்கொள்ளும் வறட்சி அபாயத்தை சமாளிக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Source link