புதுச்சேரி,
புதுச்சேரியில் அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி தொடரும் என இரு கட்சி தலைவர்களும் கூறி வந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள், பா.ஜ.க. கூட்டணிக்கு 14 இடங்கள் என முடிவானது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதி செய்தார். இதற்கிடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இணைக்க கூடாது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்தியதாகவும், இதனை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே புதுச்சேரியில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மன்சுக் மாண்டவியா தலைமையில் பா.ஜ.க. பேச்சுவார்த்தை குழு புதுச்சேரி சென்றுள்ளது. தனியார் ஓட்டலில் மன்சுக் மாண்டவியாவை என்.ஆர்.காங்கிரஸ் குழுவை சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயபால் ஆகியோர் சந்தித்து பேசிய நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு முதல்-மந்திரி ரங்கசாமியை சந்திக்க மன்சுக் மாண்டவியா திட்டமிட்டிருந்தார்.
ஆனால் மன்சுக் மாண்டவியாவை சந்திக்காமல் ரங்கசாமி திருச்செந்தூர் புறப்பட்டு சென்றார். இதனால் பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதா? என கேள்வி எழுந்த நிலையில், இன்று காலை திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன்தான் கூட்டணியில் உள்ளது என்றும், பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை இன்று ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை ரங்கசாமி வலியுறுத்தியதால் கூட்டணியில் இழுபறி ஏற்பட்ட நிலையில், மாநில அந்தஸ்து குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மன்சுக் மாண்டவியா உறுதி அளித்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க., அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து மீதமுள்ள 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சி போட்டியிடுவது என்பதை முடிவு செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
