நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் சில மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த இந்தப் போராட்டம், பின்னர் நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றது. பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் திரைப்படத் துறையினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையினர் அவரைவலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய நடவடிக்கைகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. இதனால் மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பும் மேலும் தீவிரமடைந்தது.
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மாணவர் பிரதிநிதிகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதே நேரத்தில், நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
டெல்லி GENZ போராட்டம் !பரபரப்பு பேட்டி குடுத்த அன்புமணி! PMK நிலைப்பாடு இதுதான்!
இருப்பினும், “சட்ட நடவடிக்கை மட்டும் போதாது; அரசியல் பொறுப்பும் ஏற்கப்பட வேண்டும். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர். அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் இந்தக் கோரிக்கையில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா
இந்தச் சூழலில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரது ராஜினாமா, மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ராஜினாமா கடிதத்தில் என்ன கூறினார்?
பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், “கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற சம்பவங்கள் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தின் முதல் நாளிலிருந்தே நான் எனது பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் எந்தவிதமான தீயசக்திகளின் கைகளிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது. அவர்களின் நம்பிக்கையை பாதுகாப்பதும், கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதும் மிக முக்கியம். அதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் வெற்றி முழக்கங்களை எழுப்பி கொண்டாடினர். இருப்பினும், “அமைச்சரின்ராஜினாமா மட்டுமே தீர்வல்ல; நீட் தேர்வு முறையில் முழுமையான மாற்றம் கொண்டுவர வேண்டும்” என்ற கோரிக்கையை மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால், நீட் விவகாரம் தொடர்பான அரசியல் மற்றும் கல்வி சார்ந்த விவாதங்கள் இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
