சென்னை அருகே 46 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது: தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னை,

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, கடந்த 15-ந் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. உடனடியாக, பறக்கும் படை சோதனையும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாதவரம் அருகே இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சரக்கு வாகனம் ஒன்றில் 46 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் சிக்கின. இதன் மதிப்பு ரூ.64 கோடியே 17 லட்சம் ஆகும்.

இது குறித்து விசாரித்தபோது, சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல நகைக் கடையில் இருந்து பொன்னேரியில் உள்ள நகைப்பட்டறைக்கு எடுத்துச் செல்வதாக டிரைவரும், அவருடன் வந்த ஊழியரும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 46 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க கட்டிகளுக்கான உரிய ஆவணத்தை காட்டினால், திருப்பி வழங்குவோம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் ஒரே இடத்தில் 46 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link