புதுடெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
போர் சூழல் காரணமாக பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலம், அறிவியல் ஆகிய தேர்வுகளும், 16 மொழிப் பாடத் தேர்வுகள் மற்றும் 22 திறன் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், போர் சூழல் காரணமாக ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை கணக்கிட புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இதன்படி, மாணவர்கள் மொத்தம் 5 தொகுதிகளாக பிரிக்கப்பட உள்ளனர். அனைத்து தேர்வுகளையும் எழுதிய மாணவர்கள், 4 தேர்வுகள் எழுதியவர்கள், 3 தேர்வுகள் எழுதியவர்கள், 2 தேர்வுகளை எழுதியவர்கள், துணைப் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தனித் தேர்வர்கள் ஆகிய பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அனைத்து தேர்வுகளையும் எழுதியவர்களுக்கு, அவர்களுக்கான மதிப்பெண்கள் வழக்கம்போல் கணக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மற்ற மாணவர்களுக்கு அவர்கள் எழுதிய தேர்வுகளின் சராசரி மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பாடங்கள், 3 பாடங்கள் மற்றும் 2 பாடங்கள் மட்டுமே எழுதியவர்களுக்கு, தனித்தனியாக மதிப்பெண் கணக்கீட்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
