சென்னை,
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினை காரணமாக இன்னும் திரைக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படம் விரைவில் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் நடித்துள்ள படம் திரையரங்குகளில் வெளியிடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், “இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் கேட்டு பதிலளிக்கிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் முடிவெடுத்து விளக்கம் அளிக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று மும்பைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் சம்பந்தமாக விஜய் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், விஜய் மும்பை சென்ற பிறகு இது தொடர்பான முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
