மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பாதிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே AISF, AIYF மற்றும் மார்க்சிய அம்பேத்கர் பெரியாரிய மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு,நீட் தேர்வுக்குஎதிராக முழக்கங்களை எழுப்பினர். மருத்துவக் கல்வியில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும், கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகளை நீட் தேர்வு பாதிக்கிறது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
100-க்கும் மேற்பட்டோர் கைது
போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இந்த கைது நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும், போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்தது.
AIYF-ன் குற்றச்சாட்டு
போராட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய AIYF மாநிலத் தலைவர் தமிழ் பெருமாள், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகக் கூறினார். மாணவர்களின் இந்த தொடர்ச்சியான எதிர்ப்பின் விளைவாகவே ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய மாணவர் மன்றம் (AISF), அனைத்திந்திய இளைஞர் மன்றம் (AIYF) மற்றும் மார்க்சிய அம்பேத்கர் பெரியாரிய மாணவர் இளைஞர் கூட்டமைப்பு இணைந்துநீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
‘ நீட் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்’
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய AISF மாநில செயலாளர் தினேஷ், மாணவர்களின் தொடர் போராட்டங்களே அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். தற்போது ஜனநாயகத்தின் குரலுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் வரை மாணவர் அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்தார்.
தவெகவுக்கு இப்படி ஒரு டர்னிங் பாயிண்ட்…ஒரே வாரத்தில் தலை கீழ் மாற்றம்! admk split
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த முற்றுகைப் போராட்டமும் அந்த தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை பாதுகாக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
Source link
