மேகதாது அணைப் பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதா அல்லது சட்டப்படி தீர்ப்பதா என முதல்வர் விஜய் முடிவெடுப்பார் என்ற அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்தை இடும்பாவனம் கார்த்திக் கடுமையாகச் சாடியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழக சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அண்மையில் மேகதாது விவகாரம் குறித்து வெளியிட்ட ஒரு கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் சொன்னது என்ன?
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், “மேகதாது அணைப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித் தீர்ப்பதா? அல்லது உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றங்கள் வாயிலாகச் சட்டப்படி தீர்ப்பதா? என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்” என்று தெரிவித்திருந்தார்.மாநிலத்தின் நீராதாரம் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் புதிய அரசு உறுதியாக இருப்பதாகவும், அனைத்து சட்ட வல்லுநர்களுடன் இதற்கான தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.
அடிப்படை புரிதலே இல்லை- இடும்பாவனம் கார்த்திக் ஆவேசம்
அமைச்சரின் இந்த கருத்தை முற்றிலும் சாடியுள்ள இடும்பாவனம் கார்த்திக், காவிரி விவகாரத்தின் வரலாற்றுப் பின்னணியை அரசுச் தரப்பு மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காவிரிச் சிக்கலைப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒருபோதும் தீர்க்க முடியாது என்ற மிக மோசமான இறுதி நிலையை எட்டியப் பிறகுதான், இந்தியத் தண்ணீர் தகராறு சட்டத்தின்படி, இதற்கென தனியாகக் காவிரி நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது. இதனைப் பற்றிய எந்தவொரு அடிப்படை வரலாற்றுப் புரிதலே இல்லாத அடிமுட்டாள்கள் எல்லாம் அமைச்சரானால் இப்படித்தான் விபரீதமான முறையில் குழப்பமான முடிவுகளை எடுப்பார்கள்” என்று மிகக் கடுமையான சொற்களால் சாடியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் பின்னணி
தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் காவிரி நீர் பகிர்வுப் பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் பலமுறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. அதன் விளைவாகவே 1990-களில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழகத்திற்கான நீர்ப் பங்கீடு சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.இந்தச் சூழலில், மீண்டும் பேச்சுவார்த்தை என்ற வார்த்தையைத் தமிழக அரசின் புதிய அமைச்சர்கள் கையில் எடுப்பது, தமிழகத்தின் சட்டப்பூர்வமான உரிமைகளை நீர்த்துப்போகச் செய்துவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்குவதாக விவசாயச் சங்கங்களும் கவலை தெரிவித்துள்ளன.
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதை அரசு தரப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
