prayer fulfil signs இந்த 5 அறிகுறிகள் நடந்தால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்

கடவுளிடம் எவ்வளவு தான் நம்பிக்கை, பக்தி இருந்தாலும், கடவுளிடம் நாம் முன் வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுமா என்ற சிறிய சந்தேகம் மனதில் ஏற்படும். அல்லது நாம் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது சில விசித்திரமான அறிகுறிகள், உணர்வுகள் ஏற்படும். சில சமயங்களில் இவற்றிற்கு என்ன காரணம் என தெரியாமல், அது நல்லதா? கெட்டதா என்ற குழப்பமும் ஏற்படும். ஆனால் வழிபாட்டின் போது சில முக்கியமான அறிகுறிகள் தோன்றினால் நம்முடைய வேண்டுதல்களை கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதற்கான அர்த்தம் என ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

வீட்டில் வழிபட்டாலும் சரி, கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் சரி நம் அனைவருக்குமே கடவுளிடம் ஏதாவது ஒரு விஷயத்திற்காக தினமும் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அப்படி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்து விஷயங்களும் நடந்து விடுவது கிடையாது. பல சமயங்களில் நாம் இறைவனிடம் முன் வைக்கும் வேண்டுதல்களில் பலவற்றை நாமே மறந்து விடுவதும் உண்டு. ஆனால் சிலர் சில முக்கியமான காரியங்கள் நிறைவேற வேண்டும் என கடவுளிடம் தீவிரமாக வேண்டிக் கொள்வார்கள். உதாரணத்திற்கு பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள், கடன் பிரச்சனைகள் தீர வேண்டும், வழக்குகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது போன்ற வேண்டுதல்களை தீவிரமாக முன் வைப்பார்கள். தங்களின் வேண்டுதல் நிறைவேறி விட்டால் நேர்த்திக்கடன் செய்வதாகவும் வேண்டிக் கொள்வார்கள்.

என்ன தான் கடவுளிடம் நாம் மனம் உருகி வேண்டிக் கொண்டாலும், நம்முடைய வேண்டுதல் நிறைவேறுமா என்ற சந்தேகம், குழப்பம் ஏற்படுவது உண்டு. ஆனால் நாம் இணைவனிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டிருக்கும் போது சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றினால் நம்முடைய வேண்டுதல்களை இறைவனும் ஏற்றுக் கொண்டுள்ளார். நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என ஆன்மீகத்தில் சில அறிகுறிகள் சொல்லப்படுகிறது. இவற்றில் மிக முக்கியமான 5 அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் போது இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று நடந்தால் உங்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதி செய்து கொள்ளலாம்.

வேண்டுதல் நிறைவேறும் என்பதை சொல்லும் 5 அறிகுறிகள் :

1. சாமி கும்பிடும் பொழுது உங்களையும் அறியாமல் கண்ணீர் வந்தால், உங்கள் வேண்டுதலுக்கு பலன் உண்டு. கடவுளின் அருள் உங்களுக்கு உள்ளது. உங்களின் வேண்டுதலை நிறைவேற்ற கடவுள் நினைத்து விட்டார் என்று அர்த்தம். சாமி கும்பிடும் போது காரணமோ, பெரிய அளவில் கஷ்டம் ஏதும் இல்லாமல் அழுகை வந்து கொண்டே இருக்கிறது என்றால் உங்களின் வேண்டுதல்களை இறைவன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரது அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு என்று அர்த்தம்.
2. கடவுளிடம் உங்கள் வேண்டுதலைச் சொல்லிப் பிரார்த்திக்கும் போது பல்லி சத்தமிட்டால், அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. உங்கள் விருப்பப்படி வேண்டுதல்கள் நிறைவேறும்.
3. கோவிலில் அல்லது வெளியில் நீங்கள் சாமி கும்பிடும் பொழுது பச்சிளம் குழந்தை அழுதால், உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று அர்த்தம். சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு, அபசகுனம் என நினைப்பது உண்டு. குழந்தைகள் தெய்வத்தின் மறு வடிவம் என சொல்லப்படுகின்றன. அதோ போல் கோவிலில் ஏதாவது குழந்தை தானாக ஓடி வந்து உங்களின் கைகளை பிடித்துக் கொள்கிறது அல்லது உங்கள் மடியில் வந்து அமர்கிறது என்றாலும் இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம்.
4. கோவிலில் நீங்கள் வேண்டுதல் வைக்கும் போது மணி அடித்தால், உங்கள் வேண்டுதலுக்கு பலன் கிடைக்கும் என்று அர்த்தம். அதே போல் நீங்கள் மனதார உங்களின் வேண்டுதலை இறைவனிடம் சொல்லி முறையிடும் போது திடீரென சங்கு சத்தம் கேட்டாலும் இறைவன் உங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு விட்டார் என்று அர்த்தம்.
5. நீங்கள் கடவுளிடம் வேண்டுதல் வைக்கும் போது அல்லது வேண்டுதல் வைத்த பிறகு நெற்றியில் திருநீறு அல்லது குங்குமம் வைக்கும் போது உங்களின் உடலில் காரணமே இல்லாமல் திடீரென சிலிர்ப்பு ஏற்பட்டால், கடவுள் உங்கள் அருகிலேயே இருந்து உங்களின் வேண்டுதல்களை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார் என்று அர்த்தம். “நான் உன்னுடன் இருக்கிறேன். நீ வேண்டியது கிடைக்கும்” என கடவுள் ஆசீர்வதிப்பதாக அர்த்தம்.

Source link