சென்னையில் இருந்து பெங்களூரு வரை புதிய எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன்மூலம் பயண நேரம் பாதிக்கும் கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், திறப்பு விழா எப்போது என்ற கேள்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் டோல் கட்டணம் எவ்வளவு இருக்கும், அதை சமாளிக்க முடியுமா? எனக் கேட்க தொடங்கியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வழிகாட்டுதலின் படி, மத்திய அரசால் போடப்படும் அதிவிரைவு சாலைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக டோல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை டெண்டர் மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் மேற்கொள்கிறது. இவர்கள் கார், ஜூப், வேன், இலகுரக வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 65 காசுகள் என வசூலிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் அதிவிரைவு சாலையாக NH-7 எனப்படும் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே திட்டப் பணிகள் 258 கிலோமீட்டர் தூரத்திற்கு மும்முரமாக நடந்து வருகின்றன.
பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே – கர்நாடகாவில் ஓபன்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது கர்நாடகா எல்லைக்குள் மட்டும் எக்ஸ்பிரஸ்வே சாலை பயன்பாட்டில் இருக்கிறது. இதில் ஹெடிகெனபெலே, அக்ரஹாரா, கிருஷ்ணராஜபுரா, சுந்தரபால்யா என நான்கு இடங்களில் டோல்கேட்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன் வழியாக பயணிக்கும் கார்களுக்கு 195 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சூழலில் சென்னை வரை முழுமையாக எக்ஸ்பிரஸ்வே சாலையில் பயணிக்க எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
சென்னை டூ பெங்களூரு – 2 வழித்தடங்களில் பயணம்
தற்போதைய சூழலில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன. ஸ்ரீபெரும்புதூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லலாம். இந்த வழியாக சென்றால் 7 டோல்கேட்கள் வருகின்றன. ஒவ்வொன்றிலும் 50 முதல் 80 ரூபாய் வரை என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மொத்தமாக சுமார் 415 ரூபாய் வரை செலவிட வேண்டும். மற்றொரு வழி திருவள்ளூர், ராணிப்பேட்டை, சித்தூர், கோலார், ஓஸ்கோடே வழியாக செல்லலாம். இந்த வழித்தடத்தில் 4 டோல்கேட்கள் இடம்பெற்றுள்ளன. அதன்மூலம் 355 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
NH-7 அதிவிரைவுசாலையில் டோல் கட்டணம் வசூல்
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் NH-7 எக்ஸ்பிரஸ்வே சாலை மூலம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருவின் ஓஸ்கோடே வரை பயணித்தால் லாபமா, நஷ்டமா என விவாதிக்க தொடங்கியுள்ளனர். இதுபற்றி விசாரிக்கையில், வழக்கமான டோல்கேட் போன்று இதில் செயல்படாது. Closed Loop System என்ற Fastag முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
Closed Loop Fastag கட்டண வசூல் முறை
அதாவது, ஒவ்வொரு டோல்கேட்டாக நின்று செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அதிவிரைவு சாலையில் நுழையும் போது நம்முடைய காரில் இருக்கும் Fastag பார் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு விடும். அதன்பிறகு அதிவிரைவு சாலையின் எந்த இடத்தில் வெளியேறுகிறீர்களோ, அங்கு மீண்டும் ஸ்கேன் செய்யப்படும்.
பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப டோல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வழித்தடத்தில் இடையில் உள்ள நகரங்கள் உடன் இணைக்கும் வகையில் பிரத்யேக துணை சாலைகள் அமைக்கப்படுகிறது. எனவே எளிதாக எந்த ஒரு நகருக்கும் செல்லலாம்.
258 கி.மீ தூர பயணத்திற்கு எவ்வளவு டோல்கேட்?
அப்படி பார்த்தால் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்னை – பெங்களூரு பயணத்திற்கு 250 முதல் 280 ரூபாய் மட்டுமே டோல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஓசூர் மற்றும் சித்தூர் வழித்தடத்தில் பயணிப்பதை காட்டிலும் குறைவு. அதுமட்டுமின்றி பயணம் வெறும் இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்.
