தரிசன பாதையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி தனியார் ஒப்பந்த பாதுகாப்பு நிறுவன பணியாளர்கள் மற்றும் மேலாளர் ஆகியோர் பொதுதரிசன வரிசை பாதை கட்டிடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கோவில் நிர்வாகம் சார்பில், ஒப்பந்த நிபந்தனைகள் மீறப்பட்டதாக கருதி தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டது. அந்த நிறுவனத்திடம் பெறப்பட்ட விளக்கத்தில், கடந்த 3-ந் தேதி சந்திர கிரகணம் காரணமாக மதியம் 1.30 மணியளவில் கோவில் நடை சாத்திய பின்னர், 2-வது ஷிப்ட் பாதுகாப்பு பணியாளர்கள் சுமார் 2.30 மணியளவில் பொது தரிசன வரிசை அறை எண் 5-ல் ஒன்று கூடினர்.

அங்கு வைத்து மேலாளரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அந்த நிகழ்வு செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட 4 பணியாளர்களை அந்த நிறுவனத்தினர் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்ததுடன், அவர்களுடைய 3-ந் தேதியையுடைய சம்பளத் தொகையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.எப்படியிருந்தாலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க இணை ஆணையரால் பரிந்துரைக்கப்பட்டு, தக்கார் தீர்மானத்தின் படி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Source link