பெப்சி, ரெட் புல் போன்ற குளிர்பானங்களில் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் ‘எனர்ஜி டிரிங்க்’ என்ற வார்த்தையை 90 நாட்களுக்குள் நீக்க எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெப்சி, ரெட் புல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் குளிர்பான லேபிள்களில் இனி ‘எனர்ஜி டிரிங்க்’ (Energy Drink) என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அடுத்த 90 நாட்களுக்குள் இந்த வார்த்தையைத் தங்களது தயாரிப்புகளில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவின் பின்னணி என்ன?
இந்திய உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி (FSSAI Regulations), உணவு மற்றும் பானங்கள் பிரிவில் எனர்ஜி டிரிங்க் என்று எந்தவொரு தனிப் பிரிவும் முறைப்படி வகைப்படுத்தப்படவில்லை. இந்த பானங்கள் அனைத்தும் உண்மையில் கஃபைனேற்றப்பட்ட பானங்கள் (Caffeinated Beverages) என்ற பொதுவான பிரிவின் கீழேயே வருகின்றன.இருப்பினும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வியாபார உத்திக்காக எனர்ஜி டிரிங்க் என்ற கவர்ச்சிகரமான வார்த்தையைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தி வருகின்றன. இது நுகர்வோரை, குறிப்பாக இளைஞர்களையும் மாணவர்களையும் தவறாக வழிநடத்துகிறது என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சுட்டிக்காட்டியுள்ளது
தவறான விளம்பரங்களுக்குச் செக்
உடலையும் மனதையும் உடனடியாகப் புத்துணர்ச்சியாக்குகிறது, சோர்வை நொடியில் நீக்குகிறது என்ற ரீதியில் இந்த நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை ஆகும்.
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி இந்த பானங்களில் உடலுக்குத் தேவையான உண்மையான ஊட்டச்சத்துக்களோ அல்லது ஆற்றலோ (Energy) எதுவும் இல்லை.தற்காலிக புத்துணர்ச்சியைத் தருவதற்காக இவற்றில் மிக அதிக அளவிலான கஃபைன் (Caffeine) மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுகின்றன.இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
90 நாட்கள் கெடு – மாறும் குளிர்பான லேபிள்கள்
பெப்சிகோவின் ஸ்டிங் (Sting), ரெட் புல் (Red Bull), மான்ஸ்டர் (Monster), ஹெல் எனர்ஜி (Hell Energy) மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்ளிட்ட சந்தையில் உள்ள அனைத்து முன்னணி பானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.அடுத்த 90 நாட்களுக்குள் தங்களின் தயாரிப்பு பாட்டில்கள், கேன்கள் மற்றும் விளம்பரப் பலகைகளில் இருந்து Energy Drink என்ற வார்த்தையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முழுமையாக நீக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்தப் பொருட்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் என்றும், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று, புதிய லேபிள்களை அச்சிடும் பணிகளில் குளிர்பான நிறுவனங்கள் ஏற்கனவே இறங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source link
