ஆடித்தபசு, சங்கரன்கோவில் திருத்தலத்தில் கொண்டாடப்படும் ஒரு உன்னதமான திருநாளாகும். அம்பிகை தவம் செய்து, தனது தவத்தின் பலனை அடைந்த திருத்தலமாக இந்த தலம் கருதப்படுகிறது. ஆடித்தபசு நாளில் கோமதி அம்மனை மனதார வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். இதுவரை தடைபட்டு, தேங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடித்தபசு நாளில் அம்மனை எப்படி வழிபட வேண்டும், இப்படி வழிபடுவதால் என்ன பலன் கிடைக்கும், இந்த நாளில் என்ன மந்திரம் சொல்லி, என்ன நைவேத்தியம் படைத்து அம்மனை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் வரும் மிக அற்புதமான, சக்தி நிறைந்த நாளாக கருதப்படுவது ஆடிப் பெளர்ணமி. அனைத்து மாதங்களிலுமே வரும் பெளர்ணமி சிறப்பான விரத நாள் என்றாலும் ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆடிப் பெளர்ணமி தினம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழாவாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆடித்தபசு புராணக்கதை :
புராண கதைகளின் படி, சங்கன் மற்றும் பதுமனின் என்ற அசுரர்களின், சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்காக அம்பிகை, தனது தோழியர்களை பசுக்களாக மாற்றி, பூமிக்கு வந்து தவம் புரிகிறாள். ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்று மிக கடுமையாக தவம் புரிந்த அம்மனுக்கு, அந்த தவத்தின் பலனாக சிவனும், விஷ்ணும் ஒரே உருவமாக, சங்கர நாராயணராக திருக்காட்சி அளித்த தினம் தான் ஆடிப் பெளர்ணமி. அம்பிகையின் தவம் வெற்றி பெற்று, அவள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த நாளில் நாமும் அம்பிகையை மனமுருகி வழிபட்டால், அவளை போலவே நமக்கும் வெற்றியையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அம்மன் அருள்வாள் என்பது நம்பிக்கை.
ஆதிசங்கரர் நமக்கு ஆறு விதமான வழிபாட்டு முறைகளை வகுத்து கொடுத்துள்ளார். அவற்றில் சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு ஆகிய மூன்று முறை வழிபாடுகளையும் ஒரே நாளில் செய்வதற்கு மிக உகந்த நாள் தான் இந்த ஆடித்தபசு திருநாள். சங்கரன்கோவில் திருத்தலத்தில் இன்றும் ஆடிப்பெளர்ணமி பல ஆயிரம் பக்தர்கள் கூடி, அம்மனின் தவக்கோலத்தையும், சங்கர நாராயணர் அம்மனுக்கு காட்சி தரும் திருக்கோலத்தையும் கண்டு பக்தி பரவசம் அடைகின்றனர்.
ஆடித்தபசு 2026 எப்போது?
இந்த ஆண்டு சங்கரன்கோவிலில் ஜூலை 28ம் தேதி தான் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது. பெளர்ணமி திதியானது, ஜூலை 28ம் தேதி இரவு 07.33 மணி துவங்கி, ஜூலை 29ம் தேதி இரவு 08.58 வரை உள்ளது. இருந்தாலும் ஜூலை 28ம் தேதி அன்று தான் இரவு முழுவதும் பெளர்ணமி திதி உள்ளது என்பதால் அதை கணக்கில் கொண்டு ஜூலை 28ம் தேதியன்று ஆடித்தபசு கொண்டாடப்பட உள்ளது. சங்கரன்கோவில் நேரத்தை கணக்கில் கொண்டு விரதம் இருந்து வழிபடுபவர்கள் ஜூலை 28ம் தேதியும், பெளர்ணமி நாளை கணக்கில் கொண்டோ அல்லது அருகில் இருக்கும் கோவில் நேரத்தை கணக்கில் கொண்டோ விரதம் இருப்பவர்கள் ஜூலை 29ம் தேதியும் விரதம் இருந்து வழிபடலாம்.
ஆடித்தபசு அன்று என்ன செய்ய வேண்டும்?
ஆடித்தபசு திருநாள் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் இருக்கும் அம்மன் படத்திற்கு ஏதாவது மலர்கள் சாற்றி வழிபடலாம். வாசனை மிகுந்த மலர்கள் சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. வீட்டில் விளக்கேற்றி வைத்து, அம்மனுக்கு நைவேத்தியமாக பால் பாயசம், பருப்பு பாயசம், சர்க்கரை பொங்கல் என ஏதாவது நைவேத்தியம் படைத்து வழிபடலாம். எதுவும் முடியவில்லை என்றால் எளிமையாக இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து வழிபடலாம்.
யாரெல்லாம் வழிபடலாம்?
வேலை, திருமணம், வாழ்க்கையில் முன்னேற்றம், நோய் தீர வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும் என ஏதாவது ஒரு விஷயத்திற்காக நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வெற்றி என்பதே கிடைக்கவில்லை என்பவர்கள், இந்த நாளில் கோமதி அம்மனை மனதார நினைத்து வழிபட்டு, வெற்றியை தந்து அருளும் படி வேண்டிக் கொள்ளுங்கள். அபிராமி அந்தாதியின் 100 பாடல்களையும் முழுவதுமாக படிக்க வேண்டும். அன்று நாள் முழுவதும் எந்த காரியத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை மீண்டும் மீண்டும் அம்மனிடம் சொல்லி, பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். அதே போல் மாலையிலும் விளக்கேற்றி வைத்து, அபிராமி அந்தாதி பாடி அம்மனிடம் வேண்டிக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
Source link
