பட மூலாதாரம், Reuters
கட்டுரை தகவல்எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ்
பிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இரான் போர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக டிரம்ப் கூறுகிறார்
தொடர்ந்து மூன்றாவது நாளாக இருதரப்பும் தாக்குதல்களில் ஈடுபடாத நிலையில், “மிகவும் நட்புறவான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என்று இரானுடனான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் போர் முடிவுக்கு வருவது குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார். “ஏதேனும் ஒரு நல்ல விஷயம் நடப்பதற்கான சிறந்த
இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், சண்டை நிறுத்தப்படுவதற்கு முன்பு “நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோமோ, அதைச் செய்வதற்கே மீண்டும் திரும்புவோம்” என்று அவர் எச்சரித்தார்.
நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்று இரான் மறுத்துள்ளது.
தங்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்குமாறு கேட்டுக்கொண்டதால், இரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை நிறுத்தி வைக்க முடிவு செய்ததாக டிரம்ப் கூறினார்.
இரானும் தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தினசரி நடந்த அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் பழிக்குப்பழி தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தற்காலிக நிறுத்தம் வந்துள்ளது. இந்த தாக்குதல்கள் ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்தத்தை சீர்குலைத்திருந்தது.
எண்ணெய் கொண்டு செல்வதற்கான உலகளாவிய நீர்வழிப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையில், வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இரானின் திறனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டே தங்களது தாக்குதல்கள் அமைந்திருந்ததாக அமெரிக்க ராணுவம் அந்த நேரத்தில் தெரிவித்தது.
மோதல் குறையக்கூடும் என்ற நம்பிக்கையின் காரணமாக திங்கட்கிழமை அன்று கச்சா எண்ணெயின் விலை ஒரு கட்டத்தில் 9 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்து ஒரு பேரல் 87.59 டாலராகக் குறைந்தது.
அதிபர் விமானத்தில் இருந்த டிரம்ப், ஐந்து மாத கால சண்டைக்குப் பிறகு அமெரிக்காவின் போர்க்கருவி இருப்புகள் இப்போது குறைந்து வருவதாக வெளியான ஊடக செய்திகளையும் நிராகரித்தார்.
“எங்களிடம் நிறைய ஆயுதங்கள் உள்ளன. எங்களிடம் நடுத்தர அளவிலான ஆயுதங்கள் நிறைய உள்ளன, என்ன நடந்தாலும் பயன்படுத்தக்கூடியதை விடவும் அதிகமாகவே உள்ளன,” என்று டிரம்ப் கூறினார். “இருந்தாலும் எங்களிடம் நிறைய உள்ளன. நான் இன்னும் அதிகமாக வைத்திருக்கவே விரும்புகிறேன்.”
“நிறைய உபகரணங்கள்” தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக அமெரிக்க தயாரிப்பான மிகவும் மதிப்புமிக்க ஆண்டி-பாலிஸ்டிக் ஏவுகணையான பேட்ரியாட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“அந்த அமைப்பு அதிகரித்து வருகிறது. நம்மிடம் நிறைய இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை (கோப்புப்படம்)
இதற்கிடையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறுகையில், அமெரிக்க ராணுவத்திடம் “அதிபர் டிரம்பின் அனைத்து மூலோபாய இலக்குகளையும் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட தேவைகளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையானதை விடவும் அதிகமான ஆயுதங்கள், போர்க்கருவிகள் மற்றும் இருப்புகள் உள்ளன. ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நீங்கள் அமெரிக்காவுடன் வம்பு வைத்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது” என்றார்.
“இருப்பினும், உலகில் மிகச் சிறந்ததாக விளங்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யுமாறு நமது பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை அதிபர் வலியுறுத்தியுள்ளார்,” என்று அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று இரான் மீதான தங்களது தாக்குதல்களைத் தொடங்கின. வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் இதர சொத்துக்கள் மீதும், அதே போல் இஸ்ரேலுக்குள் இருக்கும் இலக்குகள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இரான் பதிலடி கொடுத்தது.
ஜூன் மாதத்தில், இரானும் அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், அதேபோல் அடுத்த 60 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால், ஜூலை 13-ஆம் தேதி இரான் படைகள் அந்த நீர்வழியில் இருந்த எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதை அடுத்து, அமெரிக்கா இரான் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியதுடன், அந்நாட்டின் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையையும் மீண்டும் அமல்படுத்தியது.
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் மற்றும் முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தி இரான் பதிலடி கொடுத்தது, இதில் நான்கு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இரானின் சுகாதார அமைச்சகத்தின்படி, அன்றிலிருந்து நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

