23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று முன்தினம் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கமும், ரிஷிகாந்தா சிங் வெள்ளிப்பதக்கமும் வென்று பிரமாதப்படுத்தினர். அதனை தொடர்ந்து நள்ளிரவில் நடந்த போட்டியில் தமிழக பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி ஸ்னாட்ச் முறையில் 126 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 160 கிலோ என மொத்தம் 286 கிலோ எடை தூக்கி 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்துகிறேன். சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
