தமிழ்நாடு பேரிடர் அபாயத் தணிப்பு முகமை சார்பில் வெப்ப அபாய மேலாண்மை குறித்த ஒருநாள் பயிலரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெப்ப அலை பாதிப்புகளை சமாளிக்கும் நடவடிக்கைகள் முதல் மேகதாது அணை விவகாரம், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வரை பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
வெப்ப அபாய மேலாண்மைக்கு ரூ.50 கோடி நிதி
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிற்சாலை தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் இரவு நேரப் பணியாளர்களை பாதுகாப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பேரிடர் மற்றும் வெப்ப பாதிப்பு காலங்களில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதோடு, பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களைதுல்லியமாக கணித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் புதிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
வறட்சி பாதிப்பை சமாளிக்க நடவடிக்கை
தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கால்நடைகள் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
குறிப்பாக, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் நிலவும் சூழலை ஆய்வு செய்து, தனித்தனி அறிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேகதாது அணையில் உறுதியான நிலைப்பாடு
காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா எந்தவித கட்டுமானப் பணியையும் முன்னெடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என்றார்.
“மேகதாதுவில் கர்நாடகா ஒரு செங்கல் கூட எடுத்து வைப்பதற்குதமிழக அரசு அனுமதிக்காது” என்று திட்டவட்டமாக கூறிய அவர், காவிரி நீர் உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் நிறைவு
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பேசிய அமைச்சர், உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து பணிகளை அதிவேகமாக மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கரூர் விவகாரம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தமிழக அரசைப் பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கே எப்போதும் முதலிடம். அதில் எங்களின் நிலைப்பாடு உறுதியானது” என்று தெரிவித்தார்.
அதேபோல், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட அரசு வேலை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக எழுந்த கேள்விக்கு,அமைச்சர் “பரிசீலனை செய்யப்படும்” என்று மட்டும் ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். அதன்பிறகு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த சுருக்கமான பதில் கரூர் சம்பவம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
