பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.க்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் போது, பெண் எஸ்.பி.யை தனது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, சம்பந்தப்பட்ட அந்த பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் கோர்ட்டு, கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து ராஜேஷ் தாஸ், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராஜேஷ் தாஸ் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும், அதன் பின்னர் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கும்படி கோரலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜேஷ் தாஸை கைது செய்யவும், விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவும் இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link