ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படும் நாது லா கணவாய் : இந்தியா – சீனா உறவில்கிரீன் சிக்னல்? பின்னணி என்ன? – nathu la pass reopens august 1 what it means for india china relations

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லை பாதுகாப்பு சிக்கல்கள் கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளின் உறவையே பாதித்திருந்தன. குறிப்பாக சிக்கிமில் அமைந்துள்ள நாதுலா (Nathu La) கணவாய், பாதுகாப்பு காரணங்களால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 1 முதல் நாதுலா கணவாய் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்தியா – சீனா இடையேயான எல்லை வர்த்தகம் மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கல்வான் மோதலுக்குப் பிறகு உறவில் விரிசல்

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இருநாடுகளின் உறவை கடுமையாக பாதித்தது. அந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீண்ட காலம் நீடித்தது. இதன் பின்னர் இந்தியா, சீனாவுக்கு எதிராக பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான ஒத்துழைப்பையும் இந்தியா அதிகரித்தது.

மோடி – சி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு முன்னேற்றம்

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்புக்குப் பிறகு எல்லைப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சிகள் வேகம் பெற்றதாக கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தசில ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட சில எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் இன்னும் முகாம்களை அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

மீண்டும் திறக்கப்படும் நாதுலா கணவாய்

இந்தச் சூழலில்தான், சிக்கிமில் அமைந்துள்ள நாதுலா கணவாய் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை வர்த்தகம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு இருநாடுகளின் பொருளாதார உறவுகளுக்கும், எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மலைப்பாதை

இமயமலையின் கிழக்குப் பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் திபெத் பகுதியையும் இணைக்கும் மிகப் பழமையான மலைப்பாதைகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் உலகப் புகழ்பெற்ற பட்டுப் பாதையின் (Silk Route) முக்கிய வர்த்தக வழித்தடமாக விளங்கிய இந்த கணவாய், சிக்கிமின் தலைநகர் காங்டாக்கில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
1962-ஆம் ஆண்டு இந்தியா – சீனா போருக்குப் பிறகு நாதுலா கணவாய் நீண்ட காலம் மூடப்பட்டு, எல்லை வர்த்தகம் முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர், இருநாடுகளின்பேச்சுவார்த்தைகளின் விளைவாக 2006-ஆம் ஆண்டு இந்த கணவாய் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தகம் தொடங்கியது. ஆனால், 2020-ஆம் ஆண்டு கல்வான் மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் மீண்டும் மூடப்பட்டது.

தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நாதுலா கணவாய் மீண்டும் திறக்கப்படுவது, எல்லை வர்த்தகத்தை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியா – சீனா உறவில் பதற்றம் குறைந்து, புதிய நம்பிக்கைக்கு வழிவகுக்கும் முக்கியமான முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

Source link