புதுச்சேரி,
புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 14 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும், புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 2 முறை ஆளும் கட்சியாகவும், இதர கட்சியுடன் கூட்டணியாகவும் வென்ற அ.தி.மு.க.வுக்கு தற்போது வெறும் 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது, அக்கட்சியின் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கூட்டணி தர்மத்துக்காக புதுச்சேரியில் 2 தொகுதிகளை ஏற்றோம் என அ.தி.மு.க. தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“புதுச்சேரியில் உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. கூட்டணி தர்மத்துக்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் 2 தொகுதிகளை ஏற்றோம். கடந்த தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை 2 தொகுதிகளிலும் வெல்வோம். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
