ஆடி மாதம் அம்மனின் பரிபூரண அருளை பெறுவதற்குரிய மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அம்மனின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் மிகப் பெரிய கேள்வியும், குழப்பமும். ஆடி மாதத்தில் விரதம் இருக்கிறோம், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறோம், பொங்கல் வைத்து வழிபடுகிறோம், கூழ் காய்ச்சி படைக்கிறோம், அபிஷேகம் செய்கிறோம். ஆனாலும் கஷ்டங்கள் குறைந்தபாடில்லை என வேதனைப்படுகிறீர்களா? அம்மனின் மனதை மகிழ்ச்சி, அவளின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த எளிமையான வழிபாட்டினை செய்து பாருங்கள்.
நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்களோ அந்த ஊரில் இருக்கும் அம்மன் அல்லது உங்களுக்கு இஷ்டமான அம்மனின் வடிவத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவதைப் போல் மனதில் நினைத்துக் கொண்டு, இந்த எளிமையான பாடலை பாடுங்கள்.
அம்மன் பாடல் :
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
அம்மா மதுரை மீனாட்சி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் என்னை ஆதரித்து
அல்லல் போக்கும் என் தாயே
அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உவ் சக்தி
வாழ்வை தந்து வளம் தந்து
வாழ்க்கை கடலில் கரையேற்று
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
கலியுகம் காக்கும் கண்மணியே
கண்களில் இருக்கும் கருமணியே
நீ வாழும் உந்தன் ஆலயத்தில்
வந்தவர்க்கெல்லாம் நலம் பெருகும்
ஓம்காரப் பொருள் நீ தானே
உலகம் என்பதும் நீ தானே
காணும் இயற்கை காட்சிகளும்
காற்றும் மழையும் நீ தானே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
அம்மா தாயே உனை வேண்டி
அழுதிடும் என்னை தாலாட்டி
அன்புடன் ஞானப் பால் ஊட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்
உள்ளக் கோவில் உன் கோவில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன் செயலே
பெருகட்டும் உந்தன் பேரருளே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா தாயே ஆடுகவே!!
இந்த பாடலை தினமும் வழிபாட்டின் போது பாடுவதால் மனதில் இருக்கும் கவலைகள் தீரும். நன்மைகள் அதிகரிக்கும். அம்பிகையின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்பிகை மட்டுமின்றி, அனைத்து தெய்வங்களுக்கும் இந்த ஊஞ்சல் பாட்டு பாடும் வழக்கம் பல இடங்களில் உள்ளது. இந்த பாடலை பக்தியுடனும் , அன்புடனும் உள்ளப்பூர்வமாக பாடுபவர்களுக்கு மனதில் தெய்வீக உணர்வும், ஆனந்தமும் ஏற்படும். இது அனைத்து தெய்வங்களையும் மகிழ்விக்கக் கூடிய பாடலாக கருதப்படுகிறது. இந்த பாடலை தினமும் பாடி வழிபட்டு வந்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். நாம் வேண்டும் வரங்கள் மட்டுமின்றி, நம்முடைய மகிழ்வான நலமான வாழ்க்கைக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் அம்மன் அருள்வாள் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
