“வெற்றி, தோல்வி வேறு, சீமான் தவிர்க்க முடியாத தலைவர்” – காவல்துறையின் செயல்பாடு மீது நீதிபதி அதிருப்தி -பின்னணி? – victory or defeat aside seeman is an unavoidable political leader judge expresses concern over police conduct

சீமான் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழக காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியது. “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது வேறு; சீமான் தற்போது தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்” என்று கருத்து தெரிவித்த நீதிபதி, அவதூறு புகாரில் உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் அணுகுமுறையையும் சுட்டிக்காட்டினார். மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்குமதுரைஉயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை மறுநாள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடரப்பட்ட பின்னணி

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வலைப்பேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்டோர், சீமான் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தரக்குறைவான கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த அவதூறு பிரசாரம் அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 3-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள்

இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், சீமான் குறித்து திட்டமிட்டு தொடர்ந்து அவதூறான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன என்றும், பல புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் வாதிட்டனர்.

காவல்துறைக்கு நீதிபதி எழுப்பிய கேள்வி

விசாரணையின்போது, “திமுக எம்.எல்.ஏ ஒருவர் முதலமைச்சர் குறித்து பேசியபோது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் காவல்துறை, இந்த விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், “தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும், தற்போதைய அரசியல் சூழலில் சீமான் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் தலைவராக இருக்கிறார். எந்த தலைவரைப்பற்றியும் அவதூறாக அல்லது தரக்குறைவாக பேசுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

உடனடி எஃப்ஐஆர் மற்றும் வீடியோ நீக்க உத்தரவு

விசாரணையின் போது, பழனி கோவில் நில விவகாரத்தில் அமைச்சர் குறித்து பேசிய ஒருவர்மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு, சீமான் தொடர்பான புகாரில் மட்டும் காவல்துறை தாமதம் செய்வதாக வாதிட்டது.

இது அரசா? இல்ல தரிசா? சீமான் வெளியிட்ட அறிக்கை!

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சைபர்கிரைம்போலீசார் அதே நாளில் மாலைக்குள் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மறுநாள் நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி விக்டோரியா கௌரி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Source link