போராடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை

போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது போலீசார், வரம்பு மீறி பலப்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது.இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தபோது, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், முன்குற்றப் பதிவு இல்லாத போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நீதிமன்றம் கூறியும்

அதே நேரத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர். வழக்குகளின் விசாரணையை டெல்லி மற்றும் பிற மாநில அரசுகள் தொடரலாம் என்றும், ஆனால் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த பாதுகாப்பு, குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு பொருந்தாது என்றும் நீதிபதிகள் கூறினர்.இதையடுத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த உத்தரவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

வழக்குகளை தொடரும் அபாயம்

ஜூலை 25-ஆம் தேதி மத்திய அரசு அளித்த உறுதியின்படி, போராட்டக்காரர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்.கள் வாபஸ் பெறப்படும் என்றும், அமைதியான போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டதன் அடிப்படையில்தான் நாடு தழுவிய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி மத்திய அரசும், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தொடரும் அபாயம் இருக்கிறது. அரசு அளித்த பொதுவான உறுதியை மறைமுகமாக பலவீனப்படுத்த முடியாது. மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில அரசுகள் விரும்பினால் எஃப்.ஐ.ஆர்.களை வாபஸ் பெற்று, அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும். அரசு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, அனைத்து எஃப்.ஐ.ஆர்.களையும் வாபஸ் பெற வேண்டும். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது இனி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இது நடைபெறாவிட்டால், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் நாடு தழுவிய போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

தர்மேந்திர பிரதான்

கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஈடுபட்டது. கல்வி அமைச்சரின் பதவி விலகல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டபோது, போலீசார் தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி போராட்டத்தை கலைத்தனர். அந்த சம்பவத்தில் 118-க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் தொடர் போராட்டத்தால் கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

Source link