யோகிபாபு நடிப்பில் மலையாளத்தில் ரீமேக்காகும் “ஆதார்” படம்

‘ஆதார்’ படத்தினை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அங்கு யோகிபாபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஆதார்’ என்ற பெயரிலேயே மலையாளத்திலும் இப்படம் உருவாகிறது. தமிழ் படத்தினை இயக்கிய ராம்நாத் பழனிகுமார், மலையாள ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 2022-ம் ஆண்டு ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆதார்’.

இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு, சில சர்வதேச விருதுகளையும் வென்றது. ‘ஆதார்’மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், “2022ம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஆதார்’ பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகிபாபு முதன்மை வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் ‘ஆதார்’ எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.

Source link