அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே சவால் விடுத்து வரும் சீனா, தற்போது பூமிக்கே வெளிச்சமும் ஆற்றலும் தரக்கூடிய ‘செயற்கை சூரியனை’ உருவாக்கும் பிரம்மாண்ட முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
உண்மையான சூரியனை உருவாக்குவது இதன் நோக்கமல்ல. மாறாக, சூரியனின் மையப்பகுதியில் அணு இணைவு (Nuclear Fusion) முறையில் எப்படி பிரம்மாண்டமான ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அதே அறிவியல் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வகக் கட்டுப்பாட்டிற்குள் மின்சாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கள் மிக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தில் ஒன்றிணைந்து ஹீலியமாக மாறும்போது, கார்பன் உமிழ்வு ஏதுமின்றி பெருமளவு சுத்தமான ஆற்றல் வெளிப்படுகிறது. இதே அணு இணைவு முறையை பூமியில் சாத்தியமாக்க சீனாவின் அறிவியல் அகாடமி (Chinese Academy of Sciences) சார்ந்த பிளாஸ்மா இயற்பியல் நிறுவனம், ‘EAST’ (Experimental Advanced Superconducting Tokamak) என்ற பெயரில் அன்ஹுய் மாகாணத்தின் ஹெஃபெய் நகரில் சோதனை மையத்தை அமைத்துள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் ‘D’ வடிவக் கட்டமைப்பு கொண்ட மீக்கடத்தி காந்தமானது 21 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும், 582 டன் எடையும் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டோகமாக் உலை, அதிக வெப்பநிலையிலுள்ள பிளாஸ்மாவை சக்திவாய்ந்த காந்தப் புலங்கள் மூலம் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
ஏற்கெனவே இந்த ‘EAST’ திட்டத்தின் மூலம் சூரியனின் மையப்பகுதியை விடப் பல மடங்கு அதிகமான, அதாவது 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை உருவாக்கிச் சீனா சாதனை படைத்துள்ளது. மேலும், 1,000 வினாடிகளுக்கும் மேலாக இந்த அதிக வெப்பப் பிளாஸ்மாவைத் தொடர்ந்து நிலைநிறுத்தியும் காட்டியுள்ளது. எனினும், கோடிக்கணக்கான டிகிரி வெப்பத்தில் பிளாஸ்மாவைத் தடையின்றி நிலையாக வைத்திருப்பது சவாலான காரியமாகவே உள்ளது. தற்போதைய சூழலில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஆற்றலை விட, இந்த உலையை இயக்குவதற்கே அதிக ஆற்றல் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக ரீதியான அணு இணைவு மின்நிலையங்கள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், 2030-ஆம் ஆண்டிற்குள் அணுக்கரு இணைவு மூலம் மின் உற்பத்தி செய்யும் சீனாவின் இலக்கிற்கு இச்சாதனை மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கு சீமான் தவிர்க்க முடியாத தலைவர்..! காவல்துறையை விளாசிய ஐகோர்ட்..!
