வந்தே மாதரம் VS தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த தலைவர்கள்

தமிழ்த்தாய்க்கே வாழ்த்து பாடிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆம் இடம் வழங்கப்பட்டிருப்பது அரசியல் களத்திலும் பொதுமக்களிடத்திலும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நடந்த அவமரியாதை உயர்கல்வித்துறையிலும், அரசியலிலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

மூன்றாவது இடத்தில்…ஆளுநர் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற 33ஆவது பட்டமளிப்பு விழா தொடக்கம் முதலே அடுத்தடுத்த அதிர்வுகளாலும், எதிர்பாராத திருப்பங்களாலும் பரபரப்பாக அரங்கேறியிருக்கிறது. பொதுவாக, தமிழ்நாட்டில் எந்தவொரு அரசு அல்லது பல்கலைக்கழக விழா தொடங்கினாலும், முதல் குரலாக நீராரும் கடலுடுத்த… எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதே நடைமுறை, மரபு. ஆனால், நெல்லையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. வந்தே மாதரம் முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அமைச்சர், எம்எல்ஏ புறக்கணிப்பு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே அமைந்த பல்கலைக்கழகத்தில், அதுவும் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்தது, அரசியல் அரங்கில் கொதிநிலையை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த ப்ரோட்டோகால் மாற்றத்தை கண்டு கொதித்தெழுந்த பல்கலைக்கழக துணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான விஸ்வநாதன், உடனடியாக விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து நிகழ்ச்சியை புறந்தள்ளினார்.

அவரை தொடர்ந்து நெல்லை தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வை அதிரடியாக புறக்கணித்தனர்.

பலத்த பாதுகாப்பு வளையம் முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்து 3ஆவதாகப் பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்ததால், பட்டமளிப்பு விழாவில் போராட்டங்கள், அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நெல்லை மாநகர காவல் ஆணையர் மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில், நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் சிறப்பு அதிவிரைவு படையினரும் குவிக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தை சுற்றிப் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் வன்னியரசு கண்டனம் இதற்கிடையே, தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் 3ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டதற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். வந்தே மாதரம் மூலம், போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது என்றும், ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கு கண்டனத்துக்குரியது என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் கண்டிப்பு இதே போன்று, தமிழ்நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே எப்போதும் முதலிடமும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆளுநர் மாளிகை இதற்கு மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுவது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கண்டித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கண்டனம் பல்கலைக்கழகமானது தமிழ்நாடு அரசாங்கத் சட்டத்தின் கீழ் தான் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே, அரசு வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் பல்கலைக்கழக நடைமுறைகள் அமைய வேண்டுமே தவிர, வேந்தர் என்பதற்காக ஆளுநர் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் கொதிப்பு ஆளுநரின் இந்த தன்னிச்சையான போக்கை கண்டித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் உணர்வை சீண்டும் வகையில் ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையிலும், முதலமைச்சர் விஜய் இதுகுறித்து அமைதி காப்பது ஏன் என காட்டமாக வினவியுள்ளார். தமிழையும் தமிழின உணர்வையும் முன்னிறுத்தும் மண்ணில், ஆளுநர் மாளிகையின் இந்த ப்ரோட்டோகால் மாற்றம் தற்செயலானதா? அல்லது திட்டமிட்ட அரசியல் நகர்வா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் காட்டுத்தீயாக கனன்று வருகிறது.

Source link