குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் அதிகரிக்கும் போது, அதன் விளைவு பல நேரங்களில் கொடூரமான குற்றங்களாக மாறுகிறது. கர்நாடகாவில் மனைவியை கொலை செய்த கணவன், அந்த காட்சியை வீடியோ காலில் மனைவியின் பெற்றோருக்கே காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிலகி தாலுகாவில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும், அவரது கணவர் பிரவீனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மீது பிரவீனுக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், முதலில் பாக்யஸ்ரீயை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாக்யஸ்ரீயை, பின்னர் தூக்கிட்டு கொலை செய்துள்ளார். அதன்பிறகும் அவரது கொடூரம் அடங்கவில்லை. நடந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு வீடியோ கால் செய்த பிரவீன், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவர்களின் மகளை காட்டி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனால் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பிலகி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாக்யஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொலை செய்ததுடன், அந்த காட்சியை அவரது பெற்றோருக்கே வீடியோ காலில் காட்டிய இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “நான் செத்தா நீ திருந்துவியா?”… திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவி செய்த காரியம்..
