ஈபிஎஸ் மீது கொந்தளித்த சி.வி.சண்முகம்: சிங்கப்பெண் படை இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – cv shanmugam attacks aiadmk edappadi palaniswami and questions cm vijay for lack of singappen force action

விழுப்புரத்தில் அதிமுகவை சேர்ந்த பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகள் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். ஒருபுறம் ஈபிஎஸ் மீது அட்டாக் மூடில் பேசியிருக்கும் நிலையில், மறுபுறம் முதலமைச்சர் விஜய்யின் சிங்கப்பெண் அதிரடிப்படை நிலையையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதிமுக தலைமைக்கும், சி.வி.சண்முகத்திற்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இவர் தவெகவிற்கு தாவப் போகிறார் எனத் தொடர்ச்சியாக தகவல்கள் வெளிவரும் நிலையில், அதுதொடர்பாக எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இவருடன் கைகோர்த்து நின்ற விஜயபாஸ்கர்கள் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து அடுத்த அரசியல் அத்தியாயத்தை தொடங்கிவிட்டனர்.

சி.வி.சண்முகம் என்ன திட்டத்தில் இருக்கிறார்?

ஆனால் சி.வி.சண்முகம் அதிமுக தலைமை உடனும் உடன்படவில்லை. கட்சியில் இருந்தும் வெளியேறவில்லை. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமாதான உடன்படிக்கைக்கு வந்தனர். ஆனால் முரண்டு பிடித்து நிற்கும் தலைவர்களில் முதன்மையான நபராக சி.வி.சண்முகம் தொடர்கிறார். இந்நிலையில் இவர் அதிமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

அதிமுகவில் நடப்பது என்ன? ஏன் அமைதி காக்கிறார் EPS?

அதிமுகவினர் மீது தொடர்ச்சியாக அவதூறுகள்

விழுப்புரத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசும் போது, வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் 5 வயது பிள்ளைக்கு சமீபத்தில் தான் மொட்டை அடித்து காது குத்தினார்கள். இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் கையில் ஒரு பாட்டில், அவரது பிள்ளையின் ஒரு பாட்டில் என வைத்து போலியாக ஒரு வீடியோவை உருவாக்கி இணையத்தில் பரப்பி விட்டுள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்? இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை. முதலமைச்சர் விஜய் ஆட்சியில் இப்படி ஒரு நிலைமையா?

அலட்சியம் காட்டும் விழுப்புரம் போலீசார்?

விசாரிப்போம். தேவைப்பட்டால் சார்ஜ் ஷீட் போடுவோம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார். ஆனால் கைது நடவடிக்கையை பற்றி கேட்க வேண்டாம் என்கிறார். மேலும் குடும்ப பெண்களை பற்றி தவறான செய்திகளை ஏஐ பயன்படுத்தி மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். புரட்சி தலைவர், புரட்சி தலைவியால் கட்டி காப்பாற்றிய அதிமுகவை நம்பி வந்திருக்கும் பெண்களுக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா? அம்மாவை பின்பற்றி வந்த பெண்கள் குறித்து மோசமான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஈபிஎஸ் மீது சி.வி.சண்முகம் சரமாரி அட்டாக்

இதுபோன்ற விஷயங்களை ஊக்குவித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு அழகா? இதுதான் கட்சி நடத்தும் லட்சணமா? இந்நேரம் அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? இவர் கேள்வி கேட்க மாட்டார். இதுபோன்ற அவதூறு செய்திகளை அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கி ரசித்து கொண்டிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் காவல்துறை பார்த்து கொண்டிருப்பது தான் வேதனையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் நடக்கக்கூடாது என்று தான் சிங்கப்பெண் அதிரடி படையை முதலமைச்சர் விஜய் உருவாக்கினார். ஆனால் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் என்ன நிலைமை தெரியுமா?

முதல்வர் விஜய்க்கு முன்வைத்த கோரிக்கை

பெண்கள் தைரியமாக பொது வாழ்க்கைக்கு வர முடியாத சூழல் காணப்படுகிறது. எனவே உரிய அறிவுறுத்தலை வழங்கி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் கீழ் செயல்படும் காவல்துறைக்கு அறிவுறுத்துங்கள் என சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது?

ஏற்கனவே 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன. எப்படியும் 10 அல்லது 12 தொகுதிகளுக்கு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தும் அளவிற்கு திரைமறைவு அரசியல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். அதில் சி.வி.சண்முகமும் ஒருவராக இருப்பாரா? மாற்று திட்டங்கள் ஏதேனும் வைத்திருக்கிறாரா? என்பது இடைத்தேர்தலுக்கு முன்பாக தெரிந்துவிடும்.

Source link