Paytm Payments Bank,பேடிஎம் வாடிக்கையாளர்கள் பணத்துக்கு ஆபத்தா? பேமெண்ட் வங்கி கலைக்கப்பட்டால் என்ன ஆகும்? – paytm payments bank close what will happen to your wallet upi and money

இந்திய ரிசர்வ் வங்கியின் கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து, Paytm Payments Bank Limited (PPBL) வங்கிச் சேவையை முழுமையாக மூட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை அதிகாரப்பூர்வமாக மூடி கலைப்பதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் தொடங்கிவிட்டன. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் மத்தியில் எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், தங்கள் வாலட் மற்றும் கணக்கில் உள்ள பணம் மற்றும் UPI சேவைகள் ஆகியவற்றின் நிலை என்னவாகும் என்பதுதான்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

பேடிஎம் பேமெண்ட் வங்கியை ஜூலை 8, 2026 அன்று மூடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த முடிவு ‘வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949’ மற்றும் ‘நிறுவனங்கள் சட்டம் 2013’ ஆகியவற்றின் விதிகளின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கியைக் கலைக்கும் பணிக்கான அதிகாரப்பூர்வ அதிகாரியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் முன்னாள் தலைமைப் பொது மேலாளரான கிரிக்குமார் எம். நாயரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. ஜூலை 8 முதல் கிரிக்குமார் எம். நாயர் வங்கியின் இயக்குநர்கள் குழுவின் அனைத்து அதிகாரங்களையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கலைப்பு தொடர்பான முழு செயல்முறையையும் அவர் மேற்பார்வையிடுவார்.

பேடிஎம் பேமெண்ட் வங்கி மீது ஏன் இந்த நடவடிக்கை?

பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு எதிரான இந்த நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்டதல்ல. இந்த வங்கி தொடர்ந்து ஒழுங்குமுறை விதிகளைப் புறக்கணித்து வந்ததுடன், கடுமையான அலட்சியத்தையும் வெளிப்படுத்தியிருந்ததாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. ரிசர்வ் வங்கி 2026 ஏப்ரல் மாதம் பேடிஎம் பேமெண்ட் வங்கியின் வங்கி உரிமத்தை ரத்து செய்தது. அந்த நேரத்தில், டெபாசிட்தாரர்கள் மற்றும் வங்கியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே வங்கியின் செயல்பாடுகள் அமைந்திருந்ததாக ரிசர்வ் வங்கி தெளிவாகக் குறிப்பிட்டது. உரிமத்தை ரத்து செய்த பிறகு ரிசர்வ் வங்கி உயர் நீதிமன்றத்தை நாடியதற்கான காரணமும் இதுவே ஆகும்.

சட்டரீதியான நடவடிக்கைகள்!

விஜய் சேகர் ஷர்மாவின் ‘One 97 Communications’ நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பேடிஎம் பேமெண்ட் வங்கி ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய பேமெண்ட்ஸ் வங்கிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இது 2015ஆம் ஆண்டில் வங்கி உரிமத்தைப் பெற்றது. இருப்பினும், விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றாதது மற்றும் புறக்கணித்தது போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி அவ்வப்போது இதன் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
கண்காணிப்பு தொடர்பான கவலைகள் காரணமாக, புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாக நிறுத்தியதுடன், தகவல் தொழில்நுட்ப அமைப்பின் தணிக்கைக்கும் உத்தரவிட்டது. பின்னர் 2024 பிப்ரவரி மாதம் வங்கியின் வணிக நடவடிக்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ரிசர்வ் வங்கி, புதிய வைப்புத்தொகைகளை ஏற்பது அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள் மற்றும் வாலட்டுகளில் பணம் சேர்ப்பது ஆகியவற்றைத் தடை செய்தது.

அடுத்து 2026 ஏப்ரல் மாதம் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி முழுமையாக ரத்து செய்தது. இந்நிலையில், இந்த ஜூலை மாதம் வங்கியை முழுமையாக மூடி கலைப்பதற்கான (winding up) இறுதி உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

வாடிக்கையாளர்களின் பணத்துக்கு என்ன ஆகும்?

இத்தகைய சூழலில், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பானதா இருக்குமா என்று கவலைப்படுகின்றனர். தங்கள் பணத்தின் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் பல கேள்விகளைக் கொண்டுள்ளனர். இருப்பினும், வங்கியின் சொத்துகள் முறையாக நிர்வகிக்கப்படுவதையும், மக்களின் வைப்புத்தொகை பாதுகாப்பாகத் திரும்பக் கிடைப்பதையும் உறுதி செய்வதற்காகவே ஒரு ‘அதிகாரப்பூர்வ கலைப்பு அதிகாரி’ நியமிக்கப்படுகிறார் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கி வாலட் மற்றும் ஃபாஸ்டேக் நிலை!

2024ஆம் ஆண்டின் ஜனவரி – பிப்ரவரி மாதங்களிலேயே வாலட்டுகள் மற்றும் ஃபாஸ்டேக்குகளில் புதிய பணத்தைச் சேர்ப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்திருந்தது. உங்கள் கணக்கு அல்லது வாலட்டில் ஏதேனும் மீதித் தொகை இருந்தால் அது கலைப்பு செயல்முறையின் விதிகளின்படி தீர்வு காணப்பட்டு வழங்கப்படும். பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு எதிரான இந்த நடவடிக்கையைப் பற்றி பேடிஎம் பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை.
பேடிஎம் நிறுவனத்திஇன் தாய் நிறுவனம் One97 Communications ஆகும். இந்நிறுவனம் தற்போது SBI, HDFC, Axis மற்றும் ICICI போன்ற கூட்டாளர் வங்கிகளுடன் இணைந்து UPI மற்றும் பிற சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பேடிஎம் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்நிறுவனம் பலமுறை தெரிவித்துள்ளது. எனவே, இந்த நடவடிக்கையானது மூன்றாம் தரப்பு UPI கட்டணச் சேவைகளைப் பாதிக்காது. ஆனால், பேடிஎம் பேமெண்ட் வங்கி கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள UPI பரிவர்த்தனைகள் இனி முழுமையாக நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link