பட மூலாதாரம், pathrika/youtube
படக்குறிப்பு, டி.ஜி. மோகன்தாஸ் ‘பத்ரிகா’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதனை 2 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் குறித்து வலதுசாரி அரசியல் ஆய்வாளரும் இந்துத்துவ சிந்தனையாளருமான டி.ஜி. மோகன்தாஸ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
இந்த கருத்துகள் அவருடைய “தனிப்பட்ட கருத்துகள்” என்றும், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த மூத்த ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் கே.பி. ஸ்ரீகுமார், மோகன்தாஸ் எந்த நிலையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொறுப்பாளர் அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி ஸ்ரீகுமார் கூறுகையில், “சமீபத்திய போராட்டங்கள் குறித்து டி.ஜி. மோகன்தாஸ் கூறிய கருத்துகள் அவருடைய தனிப்பட்ட கருத்துகள். அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை. அவருடைய கருத்துகளில் ஆர்.எஸ்.எஸ்-க்கு உடன்பாடு இல்லை, மேலும் அவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மோகன்தாஸின் கருத்துக்கள் கேரளாவிலும் சமூக ஊடகங்களிலும் பரவலான எதிர்ப்புகளைத் தூண்டின. அதற்கு ஒரு நாள் கழித்து, அவரது விளக்கம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் இயங்கும் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர்கள் பெருமன்றம் (AISF) அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
டி.ஜி. மோகன்தாஸ் என்ன கூறினார்?
ஆங்கில நாளிதழான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல்படி, சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பெயர் பெற்ற மோகன்தாஸ், யூடியூப் சேனல் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், தான் அதிகாரத்தில் இருந்திருந்தால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதற்கு முன் ஜந்தர் மந்தர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
மூன்று முறை எச்சரித்தும் போராட்டக்காரர்கள் நகரவில்லை என்றால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டிருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நான் பொறுப்பில் இருந்திருந்தால், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பேன். மக்களை மூன்று முறை கலைந்து போகச் சொல்லியிருப்பேன். அதற்குப் பிறகு, துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டிருப்பேன். மக்கள் ஓடியிருப்பார்கள், சிலர் இறந்திருப்பார்கள், சிலர் உயிர் பிழைத்திருப்பார்கள், சிலர் தங்கள் கை, கால்களை இழந்திருப்பார்கள். நான்கு மணி நேரத்துக்குள் நிலைமை முற்றிலும் அமைதியாகியிருக்கும்” என்று அவர் அதில் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டி.ஜி. மோகன்தாஸ் பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
கேரள காவல்துறை ஆணையரிடம் அளித்த புகாரில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை “சுட்டுக் கொல்லுமாறு” மோகன்தாஸ் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இது வன்முறைக்கும் பேரழிவுக்கும் அழைப்பு விடுப்பதற்கு சமம் என்றும் ஏஐஎஸ்எஃப் குற்றம் சாட்டியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பது மிகவும் ஆபத்தான கூற்று என்று ஏஐஎஸ்எஃப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கூற்று வன்முறையைத் தூண்டுவதாகவும், மனித உயிரின் மதிப்பைக் குறைப்பதாகவும், சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருந்தக்கூடிய அனைத்து சட்டப் பிரிவுகளின் கீழும் மோகன்தாஸ் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஏஐஎஸ்எஃப் கோரியுள்ளது.
அதே நேரத்தில், அந்தக் கருத்துகளைப் பரப்பிய யூடியூப் சேனல், வீடியோவின் மூலாதாரம், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சமூக ஊடககளில் அதன் பரவலைக் குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனும் மோகன்தாஸின் கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த கருத்துக்கள் மாற்றுக் கருத்துகளை “அடக்கும்” சங் பரிவாரின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன என்று தனது ஃபேஸ்புக் பதிவில் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக, காவல்துறையையும் சட்ட ஒழுங்கையும் வேடிக்கை பார்ப்பவர்களாக கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னணி விட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனும் மோகன்தாஸின் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
சர்ச்சைக்குப் பிறகு மோகன்தாஸ் என்ன சொன்னார்?
டி.ஜி. மோகன்தாஸின் கூற்று பரவலான விமர்சனங்களைச் சந்தித்ததை அடுத்து, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
என்டிடிவி செய்தி இணையதள தகவல்படி, “பத்ரிகா மலையாளம் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட 31 நிமிட முழு விவாதத்தைப் பார்க்காதவர்களால் தான் ஃபேஸ்புக்கில் இந்த சர்ச்சை உருவாக்கப்பட்டது” என்று மோகன்தாஸ் கூறியுள்ளார்.
31 நிமிட வீடியோவில், ஒன்று முதல் ஒன்றரை நிமிட நீளமுள்ள காட்சிகள் மட்டுமே பகிரப்பட்டதாக அவர் கூறினார்.
மலையாள மொழியின் நகைச்சுவை, கிண்டல் மற்றும் மரபுத்தொடர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போது அவற்றின் இயல்பான தொனியையும் நுட்பத்தையும் இழந்துவிடுகின்றன என்றும், இதனால் எள்ளலாக அல்லது நையாண்டியாகக் கூறப்பட்ட கருத்துகள் நேரடியான கூற்றுகளாகத் தோன்றுகின்றன என்றும் மோகன்தாஸ் கூறினார்.
துப்பாக்கிச்சூடு குறித்த அவர் கூறிய கருத்துக்கள் பற்றிப் பேசுகையில், “வன்முறை கலவரங்களைக் கையாளும் போது காவல்துறையும் சிவில் நிர்வாகமும் பின்பற்றும் பொதுவான நடவடிக்கைகளின் வரிசையை விளக்குவதற்காக ஒரு கற்பனையான உதாரணத்தைக் கொடுப்பதே தன் நோக்கமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
மாநில அரசு என்ன கூறுகிறது?
இவ்விவகாரம் தொடர்பாக கேரள அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல்படி, அரசியல்வாதிகளின் புகார்களைத் தொடர்ந்து, இந்த வீடியோக்கள் குறித்து விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டார்.
மாநிலத்தின் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, மோகன்தாஸின் “இழிவான கூற்று” ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் “வெறுக்கத்தக்க, வன்முறையான மற்றும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மைக்கு” சான்றாகும் என்று கூறியுள்ளது.
“ஆர்.எஸ்.எஸ் எப்போதும் இதுபோன்ற நபர்களை ஆதரித்து வந்துள்ளது” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இருப்பினும், மோகன்தாஸுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதில் ஆர்.எஸ்.எஸ் உறுதியாக உள்ளது.
“நாட்டை வெறுப்பு மற்றும் வன்முறைத் தீயில் தள்ளுவது தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வரலாறாக இருந்துள்ளது, அதை இந்த நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது” என்று காங்கிரஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
“இத்தகைய விரக்தியடைந்த மற்றும் வெறுப்பைப் பரப்பும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வலுவான எதிர்வினை
இந்துத்துவ சிந்தனையாளர் டி.ஜி. மோகன்தாஸின் கூற்று சமூக வலைதளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் பெரும்பாலான மக்கள் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அபூர்வா எம் அஸ்ரானி என்ற எக்ஸ் தளப் பயனர், “உங்கள் சமூக வலைதளப் பக்கத்தைப் பாருங்கள்.
பிரதமருக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் ஜென் ஸி போராட்டக்காரர்களின் மொழியைக் கண்டு உங்கள் நண்பர்கள் கொதித்தெழும் அதேவேளையில், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருப்பேன் என்று கூறிய மூத்த பாஜக தலைவரும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளருமான ஒருவரின் கூற்றுக்கு அமைதி காத்தால், உங்கள் டைம்லைனைச் சுத்தப்படுத்த வேண்டிய நேரம் இதுதான்” என்று எழுதியுள்ளார்.
சஞ்சய் தேகா என்ற எக்ஸ் பயனர், “நீண்டகால ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரும் பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான டி.ஜி. மோகன்தாஸ் (கேரளா, நீண்டகால இந்துத்துவ ஆதரவாளர், பொறியாளர், வழக்கறிஞர் மற்றும் யூடியூபர்), தான் பொறுப்பில் இருந்திருந்தால் ஜந்தர் மந்தரில் காக்ரோஜ் ஜனதா கட்சி போராட்டத்தின் போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், ‘மூன்று முறை எச்சரித்துவிட்டுப் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டிருப்பார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.
மாற்றுக் கருத்துடையவர்களை மனிதர்களாகக் கருதாத, மாணவர்களுக்கு எதிராக ஆபத்தான பலத்தைப் பயன்படுத்துவதைப் பெருமைப்படுத்தும், மற்றும் பாலியல் வன்முறையைச் சாதாரணமாக்கும் ஒரு மனநிலையின் பயங்கரமான முகம் இது. ஜனநாயகத்துக்கு இதுபோன்ற ‘அறிஞர்கள்’ தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
குல்தீப் சூரி என்ற எக்ஸ் பயனர், இதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாட்டுக்குப் பதில்கள் தேவை. இருப்பினும், இந்த நபரிடமிருந்து ஆர்.எஸ்.எஸ் தன்னை விலக்கிக் கொண்டுள்ளது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


