சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் போட்டியிட்ட நிலையில், அங்கு வெற்றி வாய்ப்பினை தவற விட்டார். கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், நடந்த முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் மின்னணி வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு மற்றும் விவிபாட் கருவிகளை பரிசோதனை செய்வதற்கு தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான ஏழு நாட்களுக்குள் போட்டியிட்ட வேட்பாளர் கோரிக்கையை முன்வைக்கலாம். அதன் அடிப்படையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை சிந்தாரிப்பெட்டியில் வைக்கப்பட்ட கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணிகள் இன்று துவங்கியது. இந்நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், துறைமுகம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு கலந்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு நிகழ்வு குறித்து பேசினார்.
அதன்படி அவர் கூறுகையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 பாகங்களில் பதிவான வாக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டுமென, ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் முடிந்த ஒரு வாரத்திற்குள் நம்முடைய மறுப்பை சட்டத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் தான், சென்னையுடைய தேர்தல் அலுவலர் என்பதால் அவரிடம் திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கடிதம் அளித்தார்.
அதன் அடிப்படையில் 14 பாகங்களுடைய வாக்குகளை மறு ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியை அப்பகுதியின் மாவட்ட செயலாளர் என்ற வகையில் பார்த்து விட்டு செல்வதற்கு வருகை தந்தேன். ஒட்டுமொத்தமாக நடைபெறுகின்ற இந்த மறு ஆய்வில் என்.ஆர். இளங்கோ மற்றும் கொளத்தூர் தொகுதி தேர்தல் முகவர்களும் உடனிருந்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளார் சேகர் பாபு.
இதனிடையில் இந்த வாரம் முழுவதும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்படும் நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டு விவிபாட் கருவிகள் பரிசோதிக்கப்படவுள்ளது. வேட்பாளர்கள் எழுப்பும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பரிசோதனையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுள், விவிபாட் கருவியில் பதிவானவையும் பொருந்தி போகிறதா என்பது ஆய்வு செய்யப்படும்.
முன்னதாக மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததை, தவெக தலைவர் விஜய் சமீபத்தில் சட்டமன்றத்தில் கிண்டல் செய்து பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என திமுகவினர் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தனர். இப்படியான நிலையில் கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
