மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு தொடர்பாக மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு அவ்வப்போது தெரிவிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
8ஆவது ஊதியக் குழு வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு முக்கியத் தகவலை வழங்கியுள்ளது. 8ஆவது ஊதியக் குழு தனது செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. அதாவது, இக்குழு தனது பரிந்துரைகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமே தவிர, அவ்வப்போது தனது முன்னேற்றம் குறித்து அரசுக்குத் தெரிவிக்காது என்று கூறியுள்ளது.
அறிக்கை எப்போது வரும்?
8ஆவது ஊதியக் குழுவின் செயல்பாட்டு விதிமுறைகளின்படி (Terms of Reference) அக்குழு அரசுக்குத் தொடர்ந்து தகவல்களை அல்லது முன்னேற்ற அறிக்கைகளை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார். தனது செயல்பாட்டு முறைகளைத் தீர்மானிக்கும் உரிமை அக்குழுவுக்கு உள்ளது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 8ஆவது ஊதியக் குழுவானது அது அமைக்கப்பட்ட தேதியான 2025 நவம்பர் 3லிருந்து 18 மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் அக்குழுவின் பரிந்துரைகளை ஊழியர்கள் எதிர்பார்க்கலாம்.
ஊழியர் அமைப்புகளுடன் ஆலோசனைகள் நடைபெறும்!
8ஆவது ஊதியக்குழு பல்வேறு நகரங்களில் ஊழியர் சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறது. அடுத்தகட்டக் கூட்டங்கள் டெல்லி (ஆகஸ்ட் 7 மற்றும் 10), சென்னை (செப்டம்பர் 8) மற்றும் புதுச்சேரி (செப்டம்பர் 9) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. இக்குழுவைச் சந்திக்க விரும்பும் ஊழியர் அமைப்புகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே குழுவின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் முதலில் தங்கள் கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் அந்த மனுவிற்கு ஒரு தனித்துவமான மெமோ ஐடி வழங்கப்படும். சந்திப்பிற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இந்த ஐடி பயன்படுத்தப்படும்.
ஃபிட்மென்ட் காரணிகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை!
சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும் ஃபிட்மென்ட் காரணி யைத் தீர்மானிக்கும்போது, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனவா என்றும் மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அரசு பதிலளிக்கவில்லை. இத்தகைய அனைத்து விவகாரங்கள் குறித்தும் முடிவெடுத்துப் பரிந்துரைகளை வழங்குவது 8ஆவது ஊதியக் குழுவின் பொறுப்பு என்று அரசு கூறியுள்ளது. எனவே, இப்போதைக்கு ஊழியர்கள் ஊதியக் குழுவின் இறுதி அறிக்கையைத்தான் எதிர்பார்க்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே ஊதியம், படிகள் மற்றும் ஃபிட்மென்ட் காரணி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெளிவாகியுள்ளது.
அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்!
8ஆவது ஊதியக் குழு தற்போது கலந்தாய்வு நிலையில்தான் உள்ளது. இக்குழு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டங்களை நடத்தி கருத்துகளைக் கேட்டு வருகிறது. பின்னர் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அரசு இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இந்த முடிவுகள் ஊழியர்களின் வருமானம் மற்றும் அவர்களின் எதிர்கால நிதித் திட்டமிடல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்.
Source link
