திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமியின் உடல், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த கூராய்வுக்கு பின், உயிரிழந்த வேறு ஒரு சிறுமியின் உடலைப்பெற காத்திருந்தவர்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடலை அடக்கம் செய்யும் நிலையில் சென்று தடுத்து நிறுத்திய குடும்பத்தினர், இறுதி நிமிடத்தில் உடலை மீட்டு எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரற்ற உடல்களை வைத்து, அலட்சியத்தின் உச்சமாய் விளையாடியிருக்கிறது ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம்…
2 சிறுமியின் உடல்கள்…சென்னை மணலி, கிராமத் தெருவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த சனிக்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், அதே நாளில் கும்மிடிப்பூண்டி ஏடூரைச் சேர்ந்த அனுஷ்கா என்ற 17 வயது சிறுமியும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரது உடலும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக கொண்டுவரப்பட்டிருந்தது.
உடல்கள் ஒப்படைப்பு, அதிர்ச்சிஇந்நிலையில் தான், முதலில் மணலியை சேர்ந்த இளம்பெண்ணின் உடல் கூராய்வு முடிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்த சிறுமியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அடுத்த சிலமணி நேரங்களிலேயே கும்மிடிப்பூண்டி ஏடூரைச் சேர்ந்த சிறுமியின் உடலும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றதும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத உறவினர்கள், இறுதியாக ஒருமுறை முகத்தை பார்ப்பதற்காக துணியை விலக்கியபோது அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரே நாளில் வந்ததால்…’இது, அனுஷ்கா இல்லை, வேறு யாரோ?’ என சத்தம் போட்டுள்ளனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தினர், அவசர அவசரமாக சென்று ரெக்கார்டை புரட்டி பார்த்த போது தான் உண்மை தெரிய வந்திருக்கிறது.அதாவது உயிரிழந்த இரு சிறுமிகளும் ஒத்த வயதுடையவர்கள் என்பதாலும் ஒரே மாதிரியான உடல்வாகை கொண்டிருந்ததாலும் அவசரத்தில் உடல்களை மாற்றிக் கொடுத்து அனுப்பியது உறுதியானது. அதுமட்டுமின்றி ஒரே நாளில் அடுத்தடுத்து வந்த இரு சிறுமிகளின் உடல்களுக்கும் டோக்கன் போடும் போது குளறுபடி நடந்திருக்கிறது.

இறுதிச்சடங்கு நடந்ததால்...இதனை கமுக்கமாக கூறிய மருத்துவமனை நிர்வாகத்தினர், அலட்சியமாக நடந்து கொண்டதை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வதற்காக தாங்களே சிறுமியின் உடலை மாற்றித் தருவதாக கூறி அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு சென்று பார்த்த போது உடல் மாறிப் போனது கூட தெரியாமல் சிறுமியின் உடலை தண்ணீரை ஊற்றி கழுவி மஞ்சள் குங்குமம் வைப்பதை பார்த்து பதறிப்போன அனுஷ்காவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கினை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாறிப்போன உடலை கொடுத்துவிட்டு அனுஷ்காவின் உடலை பெற்று வந்துள்ளனர். மணலியை சேர்ந்த சிறுமியின் குடும்பத்தாரும் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…’ஒரே நாள் இறந்தனர், ஒத்த வயது, ஒரே மாதிரியான உடல்வாகு,’ என பள்ளிக் குழந்தைகளை போல், வாய்க்கு வந்த சாக்கு போக்குகளை சொல்லி ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பொறுப்புகளை தட்டிக் கழிக்கலாமா? இன்று உயிரற்ற உடல்களோடு விளையாடிய நிர்வாகம், நாளை உயிருள்ள நோயாளியிடம் விளையாடாது என என்ன நிச்சயம்? அரசு மருத்துவமனை என்ற பெயருக்கு இழுக்காய் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனக் கூறும் சிறுமிகளின் குடும்பத்தினர், அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மெமோ, அறிக்கை தர உத்தரவு இந்த நிலையில், உடல்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் தடயவியல் மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்ட மணலி சிறுமியின் உடலை ஏடூருக்கும், ஏடூர் சிறுமியின் உடலை மணலிக்கும் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்தில் ஒத்த வயது, ஒரே மாதிரியான உடல் வாகு எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் மழுப்பியது. இந்நிலையில் சம்பவத்தன்று பணியில் இருந்த தடயவியல் துறை உதவி பேராசிரியருக்கு மருத்துவமனையின் முதல்வர் மெமோ அனுப்பி உள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
