மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. துர்கா பூஜைக்கு முன்பாக, அக்டோபர் மாத சம்பளத்துடன் கூடுதலாக 20 சதவீத அகவிலைப்படி மற்றும் அக்டோபர் மாத சம்பளம் ஆகியவை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இடையேயான அகவிலைப்படி வித்தியாசத்தைக் குறைக்க தன்னுடைய அரசு உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, மேற்கு வங்க அரசு ஊழியர்கள் 6ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெற்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் அம்மாநில அரசு சமீபத்தில் 7ஆவது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. ஆனால் அதன் பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேற்கு வங்க காவல் துறை தலைமையகமான பவானி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “துர்கா பூஜைக்கு முன்பாக அக்டோபர் மாத சம்பளத்தை வழங்குமாறு நிதிச் செயலாளரிடமும், நிதி அமைச்சரிடமும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன். பூஜை மாதத்திற்காக மேலும் 20 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்குமாறும் அவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்றார். மாநில அரசு ஊழியர்கள் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளிலும் தங்கள் சம்பளத்தைப் பெறுவார்கள்.
இந்நிலையில், இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த ஆண்டு அக்டோபர் மாத நடுப்பகுதியில் வரும் துர்கா பூஜை பண்டிகைக்கு முன்பே ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவார்கள். மாநில அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, கூடுதல் 20 சதவீதம் அகவிலைப்படி அக்டோபர் முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அகவிலைப்படியில் 42 சதவீத வித்தியாசம் உள்ளது. இந்த இடைவெளியை ஒரே இரவில் குறைக்க முடியாது. அதற்கு சிறிது காலம் ஆகும்” என்றார்.
மத்திய அரசு 2016ஆம் ஆண்டில் 7ஆவது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தியது. அதே நேரத்தில் மேற்கு வங்க மாநிலம் தொடர்ந்து 6ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளத்தைப் பெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலம் அதிக பொதுக் கடனைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பட்ஜெட்டில் கணிசமான பகுதி வட்டி செலுத்துதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்குச் செல்வதால், அரசு ஊழியர்களின் சம்பளம் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை வழங்குவது அம்மாநில அரசுக்கு சற்று நெருக்கடியாகவே இருக்கிறது. இதுபோன்ற சூழலில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு அம்மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, தீபாவளி, துர்கா பூஜை போன்ற சமயங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிடுவது வழக்கம். அதேபோல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் சலுகைகள் கிடைக்கும். எனவே இந்த முறை தீபாவளி பண்டிகை சமயத்தில் அகவிலைப்படி உயர்வு போன்ற சலுகைகளுக்காக அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Source link
