சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறைகள் வரை.. பொதுமக்களின் பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும் மாற்றங்கள் இவை.
வருகிற ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த சில முக்கியமான விதிமுறைகளில் மாற்றங்கள் வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆகஸ்ட் மாத மாற்றங்கள்!
ஜூலை மாதம் நிறைவடைய உள்ள நிலையில், ஆகஸ்ட் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. வங்கிப் பரிவர்த்தனைகள், வருமான வரி, ரயில் டிக்கெட் முன்பதிவு, சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு மற்றும் ஆதார் சார்ந்த சேவைகள் தொடர்பான இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையையும் செலவினங்களையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை. புதிய மாதத்தில் கூடுதல் கட்டணங்கள் அல்லது அபராதங்களைத் தவிர்க்க இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகும்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு!
இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேற்கு மத்திய ரயில்வே (WCR) மண்டலத்தின் முன்பதிவு மையங்களில் புதிய டோக்கன் முறை அமல்படுத்தப்படுகிறது. அதேபோல, தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்திற்கு ஏற்ப டோக்கன் வழங்கப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் டோக்கன் பெற ஒரு முறையும், டிக்கெட் எடுக்க மற்றொரு முறையும் என முன்பதிவு மையத்திற்கு இருமுறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இது வரிசைகளை ஒழுங்குபடுத்துவதுடன், பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
வருமான வரி தாக்கல் காலக்கெடு!
2026-27 நிதியாண்டிற்கான ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாகும். அதற்குள் தாக்கல் செய்யாதவர்கள் தாமதக் கட்டணங்களை எதிர்கொள்ள நேரிடும். தணிக்கை (Audit) தேவைப்படாத வணிகங்களுக்கான இத்தப் படிவங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் உள்ளது. அதேபோல, தணிக்கை தேவைப்படும் வணிகங்களுக்கான காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை திருத்தம்!
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளை மறுபரிசீலனை செய்கின்றன. அதன்படி, வீட்டு உபயோக மற்றும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலைகள் ஆகஸ்ட் 1 அன்று அறிவிக்கப்படவுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நிலவரங்கள் இதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆதார் கார்டில் மாற்றம்!
ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு நடைமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் இணைந்து ‘மத்திய வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு’ (CKYC) 2.0 அமைப்பைச் செயல்படுத்துகின்றன. பயனர் ஒப்புதலுடன் நிதி நிறுவனங்கள் மத்தியப் பதிவேட்டில் உள்ள KYC தகவல்களை நேரடியாக அணுகலாம். இது ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கும் தேவையைத் தவிர்ப்பதோடு, போலி ஆவணங்கள் மற்றும் மோசடிகளையும் தடுக்க உதவும்.
கிரெடிட் கார்டு மற்றும் ஃபிக்சட் டெபாசிட்!
ஆகஸ்ட் முதல் சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள், ஆண்டு கட்டணம் மற்றும் சேவை கட்டணங்களில் மாற்றங்களைச் செய்யும். அதேபோல, ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளைப் பொறுத்து மாறுபடலாம். இது பொதுமக்கள் வாங்கும் கடன்களுக்கான வட்டியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
வங்கி விடுமுறைகள்!
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடும். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான விடுமுறைப் பட்டியலில் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த 14 நாட்களும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படாது. இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை விடுமுறைகளோடு ஞாயிறு விடுமுறை மட்டுமே பொதுவானதாக இருக்கும். அதேபோல, ஆகஸ்ட் 15 அனைத்து மாநிலங்களுக்கும் பொது விடுமுறை. மற்ற விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம்.
