பாலியல் குற்ற வழக்குகள் 2 மாதங்களில் முடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – madras high court orders sexual offence cases to be completed within two months

பாலியல் குற்ற வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், இவ்வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க அனைத்து நீதிமன்றங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதோடு, போக்சோ வழக்குகளில் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கவும், போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த ஆண்டுதோறும் இரவு ரோந்து நடைமுறையை மறுஆய்வு செய்யவும், காலியாக உள்ள போக்சோ நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நீதித்துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ச்சியான முக்கிய வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை வழக்கில் தொடரப்பட்ட பொதுநல மனு

திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுந்தர்மற்றும் சுரேஷ் ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும் கோரியிருந்தார்.

இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க முயற்சி

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.

போலீசார் அதிகார துஷ்பிரயோகம் தடுக்க நடவடிக்கை

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க இரவு ரோந்து பணிகள் ஆண்டுதோறும் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டது.

போக்சோ வழக்குகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையின்றி தள்ளிவைக்கக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், போக்சோ வழக்குகளில் விசாரணை தொடங்கிய 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்து, ஒரு ஆண்டிற்குள் முழு விசாரணையையும் முடிக்க வேண்டும் என்று போக்சோ சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview

புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவு

போக்சோ வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கடலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காலியாக உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் ஆறு புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து விரைந்து முடிவெடுத்து, அதன் முன்னேற்ற அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link