கிழக்கு கடற்கரையை ஒட்டி செல்லும் வகையில் ரயில் பாதை திட்டத்திற்கு இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளனர்.
179 கிலோமீட்டர் தூரம். வங்கக் கடலை ரசித்தவாறே சில்லென்ற காற்றுடன் பரவசமூட்டும் ரயில் பயணத்திற்கு தமிழக மக்கள் தயாராகி கொள்ளலாம். சென்னையில் இருந்து மாமல்லபுரம், மரக்காணம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை புதிய ரயில் பாதை திட்டம் எந்தவித தடைகளும் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்கு முக்கிய காரணம் புதுச்சேரி அருகே வழித்தடத்தை திட்டமிடுவதில் சிக்கல்கள் நீடித்து வந்தன. இதனால் அடுத்தகட்டத்தை நோக்கி நகரவே இல்லை. ஆனால் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
புதுச்சேரி வழியாக புதிய ரயில் பாதை – மத்திய அரசு உறுதி
வங்கக்கடலை ஒட்டிய கடலோர பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு சென்னை – கடலூர் புதிய ரயில் பாதை திட்டம் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். இவை அனைத்தையும் பரிசீலனை செய்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம், இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி ஆர்.சுதா மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஒரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கிடைப்பது எப்படி? முழு தகவல் இதோ…
கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாகுமா?
அதாவது, மேற்கு கடற்கரையில் கொங்கன் ரயில்வே மண்டலம் செயல்படுவது போல கிழக்கு பகுதியில் கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தை தொடங்கும் திட்டங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் வடக்கில் புலிகேட்டில் இருந்து தெற்கில் கன்னியாகுமரி வரை செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், சென்னை – கடலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை கட்டாயம் செயல்படுத்துவோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.
சென்னை – கடலூர் ரயில் பாதை: கடலோர ரூட்டில் கிடைக்கும் நன்மைகள்
சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு நேரடி ரயில் சேவை வசதி கிடைக்கும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். புதுச்சேரியும் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. எனவே சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி என மூன்று முக்கிய சுற்றுலா தலங்களை இணைப்பதற்கும், முக்கியத்துவம் வாய்ந்த பயண அனுபவத்தையும் தரவுள்ளது. ஈசிஆர் சாலை பயணத்தில் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு புதிய ரயில் சேவை வழிவகுக்கும். கடல்வழி சரக்கு போக்குவரத்திற்கு சென்னை – கடலூர் ரயில் பாதை உதவிகரமாக இருக்கும். சென்னையில் உள்ள துறைமுகம் மற்றும் கடலூரில் புதிதாக திட்டமிடப்பட்டுள்ள துறைமுகங்களுக்கு எளிதாக சரக்குகளை ஏற்றி செல்ல முடியும். மரக்காணம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர கிராமங்கள் அனைத்தும் நகரமயமாதலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன. எனவே புதிய குடியிருப்புகள், வர்த்தக கட்டுமானங்கள் வரக்கூடும். இதற்கான முதலீடுகளை ஈர்க்க புதிய ரயில் சேவை பயன் தரும். ஈசிஆர் வழித்தட மாவட்டங்களில் புதிய தொழில்களை கால் தடம் பதிக்கவும், ஏற்கனவே இருக்கும் தொழில்கள் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பு ஏற்படும். இது வளர்ச்சியை பரவலாக்கி சென்னையை தவிர்த்து மற்ற கடலோர மாவட்டங்களில் மக்கள் குடியேறவும், வேலைவாய்ப்பை பெறவும் உதவும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலவும் வலுப்பெற்று, பொருளாதார ஏற்றத்திற்கு வித்திடும். கிழக்கு கடலோர பகுதிகளில் சாலை வசதி, ரயில் வசதி ஆகியவை கிடைக்கவுள்ளதால் ரியல் எஸ்டேட் மதிப்பு கூடும்.
Source link
